ஜெனிவா: உலக அளவில் இளையோர் வேலையின்மை விகிதம் 15 ஆண்டுகளில் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் (ஐநா) தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவலிலிருந்து சில வட்டாரங்கள் இன்னும் மீண்டுவரவில்லை என்று அது குறிப்பிட்டது.
வேலையில், கல்வியில், பயிற்சியில் இல்லாத 15 முதல் 24 வயது வரையிலானோரின் எண்ணிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐநாவின் தொழிலாளர் அமைப்பு கூறியது.
“சில வட்டாரங்களில் உள்ள இளையோரும் பல இளம் பெண்களும் பொருளியல் மீட்சியின் பலன்களைக் காணவில்லை,” என்று அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு தெரிவித்தது.
உலக அளவில் சென்ற ஆண்டு 64.9 மில்லியன் என்று பதிவான வேலையில்லாத இளையோரின் மொத்த எண்ணிக்கை 2000ஆவது ஆண்டு தொடங்கியதிலிருந்து ஆகக் குறைவானது என்று அமைப்பு சொன்னது.
கடந்த ஆண்டு 13 விழுக்காடு என்று பதிவான இளையோர் வேலையின்மை விகிதம் 15 ஆண்டுக்கால இறக்கத்தைக் காட்டுகிறது.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முந்தைய காலமான 2019ஆம் ஆண்டில் பதிவான 13.8 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு என்று அமைப்பு தெரிவித்தது.
அந்த விகிதம் இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் 12.8 விழுக்காட்டுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
“இருப்பினும், இந்த நிலை எல்லா வட்டாரங்களுக்கும் பொருந்தாது. அரபு நாடுகள், கிழக்காசியா, தென்கிழக்காசியா, பசிபிக் ஆகிய பகுதிகளில், இளையோர் வேலையின்மை விகிதம் 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ல் அதிகமாக இருந்தது,” என்று அமைப்பு கூறியது.
பல இளையர்கள் வேலையில், கல்வியில், பயிற்சியில் இல்லை என்றும், வளர்ந்துவரும் நாடுகளில் நல்ல வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அமைப்பின் ‘இளையோருக்கான உலக வேலைவாய்ப்புப் போக்குகள் 2024’ அறிக்கை குறிப்பிட்டது.
வேலையில், கல்வியில், பயிற்சியில் இல்லாதோரின் விகிதம் 2023ஆம் ஆண்டில் 20.4 விழுக்காடாக இருந்தது. அவர்களில் மூவரில் இருவர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.


