நகர்ப்புறத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட உலகின் முதல் பறக்கும் கார்

1 mins read
94d02116-b73a-4111-8dee-ab3d79d8dbbe
‘அலெஃப் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனத்தின் பறக்கும் கார் கலிஃபோர்னிய நகர்ப்புறத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. - படம்: அலெஃப் ஏரோநாட்டிக்ஸ்/இணையம்

கலிஃபோர்னியா: புகழ்பெற்ற ‘ஹாரி பாட்டர்’ படத்தில் இடம்பெறுவதைப்போன்ற ஒரு காட்சி.

அமெரிக்காவின் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அண்மையில் அதன் பறக்கும் காரை கலிஃபோர்னியாவின் நகர்ப்புறத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது குறித்த காணொளிக் காட்சிதான் அது.

சாலையில் வழுக்கிச் செல்லும் ஒரு கார் மிகச் சீராக விண்ணில் பறந்து பிறகு தரையிறங்குவதை அந்தக் காணொளி காட்டுகிறது.

அண்மையில் சோதிக்கப்பட்ட கார் செங்குத்தாக மேலேறி, முன்னே பறந்துசெல்லக் கூடிய ஆற்றல் கொண்டது.

இதற்குமுன் சோதிக்கப்பட்ட கார்களுக்கு நீண்ட ஓடுபாதை தேவைப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அண்மைச் சோதனையில், கார் முதலில் சாலையில் சென்று, பின்னர் செங்குத்தாக மேலே எழுந்து, மற்றொரு காரின் மேலாகப் பறந்து சென்று, வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

அந்தச் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டதுடன் காரின் பாதையில் மக்கள் யாரும் இல்லாமலிருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அது கூறியது.

மின்சாரத்தில் இயங்கும் இந்த காரை வாங்க ஏற்கெனவே 3,300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் US$300,000 (S$400,560) செலுத்தி இதை வாங்கிக் கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்