ஹோ சி மின் சிட்டி: டென்மார்க் நகை தயாரிப்பு நிறுவனமான பேண்டோரா, வியட்னாமின் ஹோ சி மின் சிட்டியில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் (S$192 மில்லியன்) மதிப்பில் புதிய தொழிற்சாலையைத் திறந்துள்ளது.
தாய்லாந்திற்கு வெளியே பேண்டோரா நிறுவனம் திறந்துள்ள முதல் தயாரிப்பு ஆலை இதுதான். ஒட்டுமொத்தத்தில், இது அந்நிறுவனத்தின் நான்காவது ஆலை.
இதன்மூலம் பேண்டோராவின் நகைத் தயாரிப்பு அளவு ஏறத்தாழ 50 விழுக்காடு அதிகரிக்கும். அத்துடன், அந்த ஆலை முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது அதில் 7,000 பேர் பணிபுரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓராண்டில் 60 மில்லியன் நகைகளைத் தயாரிக்கும் திறனைக் கொண்டிருக்கும் இந்த ஆலையே ‘உலகின் ஆகப் பெரிய நகைத் தொழிற்சாலை’ எனப் பேண்டோரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சென்ற ஆண்டில் மட்டும் 112 மில்லியன் நகைகளை அந்நிறுவனம் விற்றுள்ளது. இதுவரை தாய்லாந்தில் உள்ள தனது மூன்று ஆலைகள் மூலமே அது நகைகளைத் தயாரித்து வந்தது.
“தொடக்கத்தில் எங்களது உலகளாவிய உற்பத்தி அளவில் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டை வியட்னாம் ஆலை கொண்டிருக்கும். 2020ஆம் ஆண்டுவாக்கில் அது முழுச் செயல்திறனை எட்டும்போது, மூன்றில் ஒரு பங்கு நகைகள் அங்கேயே தயாரிக்கப்படும்,” என்று பேண்டோரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்ட்டா டி பாப்லோஸ் பார்பியர் கூறினார்.
திறமையான தொழிலாளர்கள், நீண்டகால நகை தயாரிப்புப் பாரம்பரியம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், உகந்த தொழிற்சூழல் ஆகிய காரணங்களால்தான் புதிய ஆலையை அமைக்க வியட்னாம் தேர்வுசெய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
ஹோ சி மின் சிட்டி தொழில், உற்பத்தி நடுவத்தில் 7.5 ஹெக்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் மட்டுமே இயங்கும். மேலும், முழுக்க முழுக்க மறுபயனீடு செய்யப்பட்ட தங்கமும் வெள்ளியும்தான் அங்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
