நியூயார்க்: ஏர்பஸ் எஸ்இ ஏ380 ரக விமானங்கள் உலகிலேயே ஆகப் பெரிய பயணிகள் விமான வகை ஆகும். கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு விமானப் போக்குவரத்து மீண்டு வந்தபோது அவ்வகை விமானங்களில் எதிர்பாராத அளவுக்குப் பயணிகள் பலர் பயணம் செய்தனர்.
ஆனால், ஏர்பஸ் எஸ்இ ஏ380 ரக விமானங்களுக்கான பராமரிப்புச் செலவுகள் விமானச் சேவை நிறுவனங்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வகை விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது பழுதுபார்ப்புப் பணிகள், சோதனைப் பணிகள், பாகங்களை மாற்றி அமைக்கும் பணிகள் அதிகரித்துவிட்டன.
கூடுதல் பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் அதே சமயம் பழுதுபார்ப்புப் பணிகளும் தேவைப்படுகின்றன.
நெருக்கடிநிலை சறுக்கு மிதவையில் கசிவு ஏற்படுவது, தரையிறங்க தேவைப்படும் கருவிகள் பழுதடைதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
ஒவ்வோர் ஏர்பஸ் எஸ்இ ஏ380 ரக விமானத்திலும் 485க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்யலாம். எனவே, இவ்வகை விமானங்களுக்கு இயந்திரக் கோளாறு ஏற்படும்போது அத்தனை பயணிகளுக்கும் மாற்றுப் பயண ஏற்பாடு செய்வது எளிதன்று என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் பழுதுபார்ப்புப் பணிகளுக்கான செலவும் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.