தோக்கியோ: ஜப்பானின் ஷிசுகோ மாநிலத்தில் உள்ள நாகைசுமி நகரத்தில் உள்ள பூங்கா, உலகின் ஆகச் சிறிய பூங்கா என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கிகரித்துள்ளது.
பூங்காவிற்கான சான்றிதழையும் அமைப்பு பிப்ரவரி 25 வழங்கியது. அதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
பூங்காவின் அளவு 0.24 சதுர மீட்டர். அதாவது இரண்டு ஏ3 தாள்களின் மொத்த அளவுதான் இருக்கும்.
முதலில் அந்த பூங்கா ஒரு சிறு இடமாக இருந்தது. ஆனால் நகரசீரமைப்பு ஆணையம் சில மறு சீரமைப்பு வேலைகளை மேற்கொண்டதால் அந்த பூங்கா மேலும் சிறிதாகி விட்டது.
பின்னர் 1988ஆம் ஆண்டு அங்கு குடியிருப்பாளர்கள் அமர சிறிய பலகை வைக்கப்பட்டது. ஆனால் அது பூங்காவாகப் பதிவு செய்யப்படவில்லை.
சிறிய இடமாக இருந்ததால் அது உலகின் சிறிய பூங்கா என்று சமூக ஊடகங்களில் பிரபலமானது. பின்னர் அதை அந்நகரம் பூங்காவாகப் பதிவு செய்து இப்போது சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இதற்கு முன்னர் உலகின் ஆக சிறிய பூங்காவாக அமெரிக்காவின் போர்ட்லாண்டில் உள்ள மில் என்ட்ஸ் பார்க் இருந்தது. அதன் அளவு 0.29 சதுர மீட்டர்.

