பார்பேடாஸ்: அழிந்துவிட்டது என அறிவியலாளர்களால் கருதப்பட்ட ஆகச் சிறிய பாம்பு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களின் பார்வையில் பட்டுள்ளது.
‘பார்பேடாஸ் நூல்பாம்பு’ எனப்படும் அப்பாம்பு, பார்பேடாசின் மத்தியப் பகுதியில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு கடந்த மார்ச்சில் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு பாறைக்கு அடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“பார்பேடாஸ் நூல்பாம்புகள் பார்வைத்திறன் அற்றவை. ஆதலால், அவை மறைந்தே இருக்கும்,” என்றார் அதனைக் கண்டுபிடித்த பார்பேடாஸ் சுற்றுச்சூழல் அமைச்சின் திட்ட அலுவலர் கானர் பிலேட்ஸ்.
“அவை மிகவும் அரிதானவை. 1889ஆம் ஆண்டிலிருந்து சிலமுறை மட்டுமே அவை தென்பட்டுள்ளன. அதனால், பலரும் அதனைப் பார்த்திருக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
உலகின் ஆகச் சிறிய பாம்பினமாகக் கருதப்படும் இவ்வகைப் பாம்புகள், எட்டு முதல் பத்து சென்டிமீட்டர் நீளமே வளரக்கூடியவை.
“பொருள்களைத் தேடுவது உங்களுக்கு வழக்கமாக இருந்து, பலகாலம் அவற்றைப் பார்க்காமல், திடீரென அவற்றைக் காணும்போது அதிர்ச்சி அடைவீர்கள்,” என்றார் திரு பிலேட்சுடன் சேர்ந்து அப்பாம்பைக் கண்டுபிடித்த திரு ஜஸ்டின் ஸ்பிரிங்கர்.
பின்னர் அப்பாம்பு வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, நுண்ணோக்கி மூலம் ஆராயப்பட்டது.
பார்பேடாஸ் நூல்பாம்புகள் பாலியல் உறவு மூலம் இனப்பெருக்கம் செய்பவை என்றும் அதன் பெண்ணினம் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும் என்றும் கூறப்படுகிறது.