மோசமடையும் காற்றின் தரம்; சிலாங்கூரில் திறந்தவெளியில் குப்பை எரிக்கத் தடை

மோசமடையும் காற்றின் தரம்; சிலாங்கூரில் திறந்தவெளியில் குப்பை எரிக்கத் தடை

2 mins read
01842424-de40-485b-a9d5-62f5b0e31574
செப்டம்பர் 3ஆம் தேதி அடர்ந்த புகைமூட்டத்தால் சூழப்பட்டுக் காணப்படும் கோலாலம்பூர் நகரின் வான்வெளித் தோற்றம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் புகைமூட்டத்தால் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திறந்தவெளியில் குப்பை எரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பில் உள்ள சட்டங்களின் கீழ், திறந்தவெளியில் எரியூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில் சிலாங்கூர் மாநிலப் பொதுச்சுகாதார, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஜமாலியா ஜமாலுதீன் எச்சரித்துள்ளார்.

காற்றின் தூய்மைக்கேடு குறியீட்டு அளவு மீண்டும் உயர்ந்து வருவதைச் சிலாங்கூர் அரசு தீவிரமாகக் கருதுவதாகவும், புகைமூட்டத்தைச் சமாளிக்கச் சம்பந்தப்பட்ட முகமைகளின் தயார்நிலை பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, ஜோஹான் செத்தியா, 180, ஷா ஆலாம் 168, பெட்டாலிங் ஜெயா, 157, கிள்ளான், 155, பான்டிங், 155, கோலா சிலாங்கூர், 155 ஆகிய ஆறு பகுதிகள் ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவுசெய்துள்ளன.

சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி மன்றங்கள், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை ஆகியவை இணைந்து கண்காணிப்பையும் அமலாக்கத்தையும் தீவிரப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தூய்மைக்கேடு குறியீடு 200ஐ தாண்டினால், பள்ளிகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் திறந்தவெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்தால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற ஜமாலியா, பொதுமக்கள் அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
மயக்கம்மலேசியாசிலாங்கூர்புகைமூட்டம்காற்றுத்தரம்பாதிப்பு