கோலாலம்பூர்: மத்திய கிழக்கு நெருக்கடியால், மலேசிய உற்பத்தித் துறையில் நிலைமை மோசமாகியுள்ளதாக மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.
இவ்வாண்டு ஏப்ரல் 7ஆம் தேதி, முதல் கருத்தாய்வு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிலைமை மோசமடைந்துள்ளதாக இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வு காட்டியதாக மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜேகப் லீ தெரிவித்தார்.
இரண்டாவது கருத்தாய்வில் பங்கெடுத்த 225 பேரில் 72 விழுக்காட்டினர், ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து தங்கள் ஒட்டுமொத்தச் செயலாக்க நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறினர். 22 விழுக்காட்டினர், அந்த மோசமான நிலை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதாகத் தெரிவித்தனர்.
“ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே சிறிது முன்னேற்றம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் மாற்று விநியோக மூலங்களைப் பெற்றுக்கொள்ளமுடிந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.
“இருபது விழுக்காட்டினர் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் முன்னைய கருத்தாய்வில் கோடிகாட்டப்பட்ட அதே நெருக்கடி நிலையில்தான் தொடர்ந்து செயல்படுகின்றனர் என்றும் கூறினர்,” என்று திரு லீ அறிக்கை ஒன்றில் கூறினார்.
மத்திய கிழக்கு நெருக்கடியை மத்திய அரசாங்கம் உடனடியாகவும் தீவிரமாகவும் கையாண்ட விதத்தை அவர் பாராட்டினார்.
முயற்சிகள் தேவைப்பட்டாலும், உடனடி நடவடிக்கை தேவைப்படுவதாகக் கண்டுபிடிப்புகள் காட்டுவதாய் அவர் கூறினார்.
“கருத்தாய்வில் பங்கேற்றவர்கள் ஊழியரணியில் மாற்றங்கள் செய்துள்ளனர் அல்லது செய்யத் திட்டமிடுகின்றனர் என்பதால் வேலைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“செலவுகளும் விநியோக நெருக்கடிகளும் போதுமான நிவாரணமின்றி தொடர்ந்தால், குறைக்கப்பட்ட வேலை நேரங்கள், தற்காலிகப் பணி நிறுத்தங்கள் ஆகியவை நிரந்தர ஆட்குறைப்புக்கு இட்டுச் செல்லும்,” என்று திரு லீ கூறினார்.
“75க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அந்தப் பாதிப்பு மிக அதிகம் உள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 35 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

