பாத்தாம்: இந்தோனீசியாவின் பாத்தாம் நகரில் உள்ள நோங்சா வட்டாரவாசிகள் பலர், கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 5) நோங்சா மின்னிலக்கப் பூங்காவுக்குச் சென்றுவரும் வழிகளை முடக்கினர்.
அவர்கள் நீர்ப்பற்றாக்குறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். குடியிருப்பு வட்டாரங்களில் பல மாதங்களாகப் போதுமான நீர் இல்லாதபோதும் தரவு நிலையங்களை விரிவாக்கும் பணிகள் தொடர்கின்றன என்பது குடியிருப்பாளர்களின் குற்றச்சாட்டு.
பல ஆர்ப்பாட்டங்கள்
கடந்த இரு மாதங்களாக இந்தோனீசியாவில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. ரியாவ் தீவுகளில் சுத்தமான நீர் கிடைக்காததால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துவருகிறது.
தரவு நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கியதிலிருந்து தாங்கள் பெரிய அளவில் நீர்ப்பற்றாக்குறைக்கு ஆளாகியிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான அண்டி லாலாங், ஜகார்த்தா போஸ்ட் ஊடகத்திடம் திங்கட்கிழமை தெரிவித்தார்.
நோங்சா மின்னிலக்கப் பூங்காவைச் சுற்றி காவல்துறையினரும் ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அப்பகுதிக்குள் நுழைய முயன்ற வாகனங்களை வேறு பாதைகளுக்கு மாற்றிவிட்டனர்.
புதன்கிழமை (அக்டோபர் 7) நிலவரப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படவேண்டிய நீரில் கிட்டத்தட்ட 53 விழுக்காட்டு நீர் மீண்டும் திறந்துவிடப்பட்டது. எனினும், அது குடியிருப்பாளர்களின் கோபத்தைத் தணிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாமல் இடையூறு மீண்டும் ஏற்பட்டால் தாங்கள் மேலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக நோங்சா குடியிருப்பாளர் ஜுலியார்டி அடின்டா ஜகார்த்தா போஸ்ட்டிடம் சொன்னார்.
பிபி பாத்தாமின் (BP Batam) வர்த்தக மேம்பாட்டுப் பிரிவுத் துணைத் தலைவரான டெனி டொண்டானோ, தரவு நிலையப் பணிகள்தான் நோங்சாவாசிகள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்குவதற்குக் காரணம் என்று கூறப்படுவதை மறுத்தார். எல் நினோ பருவநிலை முறையால் நாடு முழுவதும் அதிக காலத்துக்குத் தொடரும் வறண்ட நிலையே அதற்குக் காரணம் என்றார் அவர்.
தரவு நிலையங்களுக்கான நீர் விநியோகம்
நோங்சாவில் உள்ள தரவு நிலையங்களும் குடியிருப்புப் பகுதிகளும் மற்ற நீர் விநியோக முறைகளைச் சார்ந்திருப்பதாக டெனி குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அவ்வட்டாரத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அங்கு அனைத்துலக வாடகைதாரர்கள் கேள்விகளை எழுப்பியதாகவும் நோங்சா மின்னிலக்கப் பூங்காவின் மனிதவள இயக்குநர் நாரா தேவா தெரிவித்தார்.
தரவு நிலையங்களை நடத்தப் பெரிய அளவில் நீர் தேவைப்படும். பொதுவாக சர்வர் இயந்திரங்களைக் குளுமையாக வைத்திருப்பதற்கு அதிக நீர் அவசியமானது.
