ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஆண்டிறுதி விடுமுறைக் காலம் சூடுபிடிக்கும் வேளையில் இன்னும் கடுமையான வானிலையை எதிர்கொள்ளத் தயாராகும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுமத்ராவை மூழ்கடித்த வெள்ளத்திலிருந்து மக்கள் ஒருபுறம் மீண்டுவரும் நிலையில் மில்லியன்கணக்கானோர் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்தும் பிற பெருநகரங்களிலிருந்தும் பயணம் செய்கின்றனர்.
ஆண்டின் இறுதி வாரத்தின்போது அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் கூடுவதால் சாலைகள் உள்பட ரயில்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகிய போக்குவரத்து நிரம்பிவழியும்.
குறிப்பாக பாலியின் டென்பசாரைப் போல படையெடுத்துவரும் ஏராளமான சுற்றுப்பயணிகளைச் சமாளிக்க ஜகார்த்தா தயாராகும்.
கடந்த வார இறுதியின்போது 519,000க்கும் அதிகமான வாகனங்கள் சுங்கச் சாவடிகளைக் கடந்துசென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து ஜனவரி 4ஆம் தேதி வரை ஜகார்த்தாவிலிருந்து ஏறக்குறைய 2.9 மில்லியன் வாகனங்கள் வெளியேறும் என்றும் கிட்டத்தட்ட 2.8 மில்லியன் வாகனங்கள் உள்ளே வரும் என்றும் அதிகாரிகள் கணிக்கின்றனர்.
விடுமுறைக் காலக்கட்டத்தின்போது கிட்டத்தட்ட 17 மில்லியன் மக்கள் ரயில்களில் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட அது 3 விழுக்காடு அதிகம்.
ஜகார்த்தாவிலிருந்து யோக்யகர்த்தா, பண்டோங், சுரபாயா ஆகிய பகுதிகளுக்குச் செல்ல 900,000 பயணச் சீட்டுகள் விற்றுத்தீர்ந்ததாக பி.டி. கெராத்தா ஆப்பி இந்தோனீசியா ரயில் நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஏறக்குறைய 3,000க்கும் அதிகமான பேருந்துப் பயணங்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தோனீசியப் போக்குவரத்து அமைச்சு 19 நாள் பயணக் கண்காணிப்பு நடைமுறையை இம்மாதம் 19ஆம் தேதி அறிமுகம் செய்தது. ஆண்டிறுதியில் பாதுகாப்பான பயணங்களை உறுதிசெய்ய வானிலை ஆய்வகத்துடன் இணைந்து அந்த நடைமுறை உருவாக்கப்பட்டது.
விடுமுறைக் காலத்தில் ஏறக்குறைய 119.5 மில்லியன் மக்கள் அதாவது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 42 விழுக்காட்டினர் பயணம் செய்வர் என்று அமைச்சு எதிர்பார்க்கிறது.

