தோக்கியோ: ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளில் ஆக மோசமான காட்டுத்தீயால் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 26ஆம் தேதி மூண்ட தீ, ஓஃபுனாட்டோ காட்டுப் பகுதியில் 1,200 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்புக்குப் பரவியுள்ளதாக தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு கூறுகிறது.
பாதிக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பிறகு ஆக மோசமான தீ இது என்றும் அமைப்பின் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.
1992ஆம் ஆண்டின் காட்டுத்தீயால் 1,030 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் பாதிக்கப்பட்டது.
சனிக்கிழமை (மார்ச் 1) நிலவரப்படி, அண்மைய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
உள்ளூர்க் காவல்துறையினர் பிப்ரவரி 27ஆம் தேதி, மாண்டவரின் உடலைக் கருகிய நிலையில் கண்டெடுத்தனர்.
தீயினால் 80க்கு மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதுமிருந்து ஏறக்குறைய 1,700க்கு மேற்பட்ட தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானின் தேசிய ஒலிபரப்புக் கழகமான ‘என்எச்கே’ வெளியிட்ட படங்களில் காட்டுத்தீயால் எழும் புகை ஒரு பெரிய மலையை மறைக்குமளவு இருப்பதைக் காண முடிகிறது.
தீ மூண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி மேலும் இரண்டு இடங்களிலும் காட்டுத்தீ பற்றியெரிவதாகக் கூறப்பட்டது.