ஃபுகுவோகா: அசுரத்தனமான ஷான்ஷான் சூறாவளி ஜப்பானின் தென்தீவான கியுஷுவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) பயமுறுத்தி வருகிறது.
பலத்த காற்றும் புயலின் வேகமும் அதிகரிக்கும் என்பதற்கான உச்சகட்ட எச்சரிக்கையை அதிகாரிகள் அறிவித்ததோடு, பத்திரமாக வேறு இடங்களுக்குச் செல்லுமாறு ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இந்த சூறாவளிதான் இந்த ஆண்டின் ஆக மோசமானது என்று ஜப்பானிய வானிலை அலுவலகம் தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் புயல் மையம் கொண்டதும் மணிக்கு 252 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது.
சூறாவளி காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதில் 254,610 வீடுகள் இருளில் மூழ்கியதாக கியுஷு மின்சேவை நிலையம் கூறியது.
“கியுஷுவின் ககோஷிமா வட்டாரத்தில் உயரமான அலைகள் வீசும் என்றும் மூர்க்கமான காற்று வீசும் என்றும் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது,” என்று ஜப்பானிய வானிலை அலுவலகம் தெரிவித்தது.
“ககோஷிமா வட்டார மக்கள் புயல்காற்றின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க உச்சகட்ட விழிப்புநிலையில் இருக்க வேண்டும்.
கியுஷுவில் கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பும். அத்துடன், நிலச்சரவுகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது, ஆறுகள் நிரம்பி வழிவது போன்றவற்றை கவனித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்,” என்று அந்த அலுவலகம் தனது எச்சரிக்கை அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது.