இந்தோனீசியாவில் 11 பேர் இருந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

1 mins read
d6be1018-9d40-4bd9-a31f-dedbc699fc54
தெற்கு சுலாவெசி தலைநகர் மகாசருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள். - படம்: இபிஏ

ஜகார்த்தா: காணாமற்போன விமானம் ஒன்றின் சிதைவுகளை இந்தோனீசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மீன்பண்ணைகளைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட அந்த விமானத்தின் சிதைவுகள் தெற்கு சுலாவெசி மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தில் 11 பேர் இருந்தனர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

சம்பந்தப்பட்ட ஏடிஆர் 42-500 டர்போபிராப் வகை விமானம் ‘இந்தோனீசியா ஏர் டிரான்ஸ்போர்ட்’ (Indonesia Air Transport) எனும் விமானத்துறைக் குழுவுக்குச் சொந்தமானது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (ஜனவரி 17) பிற்பகல் 1.30 மணிக்குத் தெற்கு சுலாவெசியின் மாரோஸ் வட்டாரத்தில் பறந்து பறந்து கொண்டிருந்தபோது அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அவ்விமானத்தில் எட்டு ஊழியர்களும் மூன்று பயணிகளும் இருந்தனர். மீன்பண்ணைகளைக் கண்காணிக்க இந்தோனீசியாவின் கடல்துறை விவகார, மீன்பண்ணை அமைச்சு விமானத்தைப் பணியில் ஈடுபடுத்தியிருந்தது.

விமானத்தில் இருந்த பயணிகள் அந்த அமைச்சின் ஊழியர்களாவர்.

விமானத்தில் இருந்தவர்களைத் தேட 1,200 மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்படுவர் என்று தெற்கு சுலாவெசி மீட்பு அமைப்பின் தலைவர் முகம்மது அரிஃப் அன்வார் உள்ளூர் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்குத்தான் நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அவர்களில் சிலரைப் பாதுகாப்பாக மீட்கும் நம்பிக்கையைக் கொண்டுள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு யோக்யகார்த்தா மாநிலத்திலிருந்து புறப்பட்ட அவ்விமானம் தெற்கு சுலாவெசி தலைநகர் மகாசருக்குச் சென்றுகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) காலை விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்