கோலாலம்பூர்: ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் குறித்த கருத்துகளை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் இரண்டிலும் பதிவிட்டிருந்தார்.
அப்பதிவுகள் ஆகஸ்ட் 1 அன்று ‘ஆபத்தான அமைப்புகள், தனிநபர்கள்’ என்ற குறிப்புடன் நீக்கப்பட்டன. அதோடு, ஆகஸ்ட் 4 அன்று ஆர்டிஎம் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின் நேரலையையும் ஃபேஸ்புக் தடுத்துள்ளது.
பதிவுகளை நீக்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் இரண்டையும் நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தைக் கண்டித்த மலேசிய அரசாங்கம், பேச்சுரிமைக்கு எதிரான அச்செயலுக்கு விளக்கம் அளிக்கவும் மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என்று வலியுறுத்தியது.
பிறகு, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) மெட்டா நிறுவனத்தினர் பிரதமர் அலுவலகத்திற்கு விளக்கமளிக்கச் சென்றிருந்தனர். சந்திப்புக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) “பதிவு நீக்கம் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது” எனவும் “நடந்த செயல்முறை தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மெட்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பதிவுகள் ‘முறையான செய்தி’ என்ற குறிப்புடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் அறியப்படுகிறது.
இவ்வாறு நடப்பது இரண்டாம் முறை என்பதால், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான கருத்துகளை நீக்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியா மெட்டா நிறுவனத்தை எச்சரித்துள்ளது.