பிரதமர் பதவி விலகக்கோரி பங்ளாவில் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

2 mins read
900db371-9e12-408c-b051-0adbf837caa1
அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட கொடிகளுடன் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்ற கோஷமிட்டபடி மாணவர்கள் அணிவகுத்துச் சென்றனர். - படம்: இபிஏ

டக்கா: சென்ற மாதம் நாடுமுழுதும் அரசாங்கப் பணிகளுக்கான வேலை ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அப்பொழுது ஏற்பட்ட வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மாண்டோரின் குடும்பங்களுக்கு நீதி வேண்டும், நடந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்று கோரி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) ஆயிரக்கணக்கானோர் தலைநகர் டக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைக்க காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர் புகையையும் பயன்படுத்தியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட கொடிகளுடன் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்ற கோஷமிட்டபடி மாணவர்கள் அணிவகுத்துச்சென்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாவட்ட அலுவலகக் கட்டடத்திலும் காவல்துறையின் கண்காணிப்பு சாவடியிலும் தீ முட்டப்பட்டது. காவல் துறையின் கவச வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

அபிக்கஞ்ச் என்ற வடகிழக்கு நகரில் பல அரசாங்க அலுவலகங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ முட்டினர் என்று காவல்துறை அதிகாரி கலிலுர் ரஹ்மான் கூறினார். அபிக்கஞ்ச் நகர் அருகில் உள்ள சில்ஹத் நகரிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களை தாக்கியதால்தான் ரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர் புகையையும் கையெறிக் குண்டுகளையும் தற்காப்புக்காக பயன்படுத்தியதாக காவல்துறையினர் விளக்கமளித்தனர். சில்ஹத் நகரில் சம்பவத்தை நேரில் பார்த்தவர் 20 பேர் அதனால் காயமுற்றதாகக் கூறினார்.

பிரதமர் ஹசினா எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சவாலாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்துவிட்டன. பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) புறக்கணித்த இவ்வாண்டின் ஜனவரி மாதத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி ஆட்சி அமைத்தபின்பும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பங்ளாதேஷ் 1971ல் பாகிஸ்தானுடன் சுதந்திரத்துக்காக நடத்திய போரில் போராடியோரின் குடும்பத்தினருக்கு அரசாங்க பணிகளில் 30 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை எதிர்த்து சென்ற மாதம் அந்தப் போராட்டங்கள் மாணவர்களின் தலைமையில் வெடித்தன.

குறிப்புச் சொற்கள்