வாஷிங்டன்: மத்தியக் கிழக்கின் தற்காப்பை மேம்படுத்த கூடுதல் போர்க் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பிவைக்கப் போவதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சான பென்டகன் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 2) அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே சில நாள்களுக்கு முன் ஈரானில் கொல்லப்பட்டார். மேலும் பல முக்கிய பாலஸ்தீனப் போராளிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். இது மத்திய கிழக்கில் நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் நேரடிப் போருடன், ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகளும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியத்தை வலுப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் செயல்படும் தமது போர்ப்படைகளின் பாதுகாப்புக்கும் இஸ்ரேலின் தற்காப்பை வலுப்படுத்தவும் அமெரிக்கா மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அங்கு ஏற்படக்கூடிய எவ்வித நிகழ்வுகளுக்கும் தயார் நிலையை உறுதிசெய்ய இந்த உத்தரவை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பிறப்பித்துள்ளார் என்று பென்டகன் ஓர் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்குக்கும் ஐரோப்பாவுக்கும் கூடுதலான கடற்படை கப்பல்களையும் பாலஸ்டிக் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தக்கூடிய நாசகாரி போர்க் கப்பல்களையும் அனுப்ப திரு ஆஸ்டின் ஒப்புதல் அளித்துள்ளார்.
வான்வழி மிரட்டல்களைச் சந்திக்க தனிப்பட்ட போர் விமானப் படை ஒன்றும் அனுப்பிவைக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் கொண்டு தாக்கியதிலிருந்து அமெரிக்கா அதன் மத்திய கிழக்கு போர்ப் படைகளை மேம்படுத்தி வருகிறது. அப்பொழுது, அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் உதவியுடன் இஸ்ரேல் அந்த 300க்கும் மேற்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுத்துவிட்டது.
தற்போது இஸ்ரேலுக்கு மிக அருகாமையில் உள்ள லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா போராளிகளின் ஆயுத பலம் மிகப் பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. சென்ற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா மத்தியக் கிழக்கில் மேற்கொண்டுள்ள புதிய ராணுவத் திட்டங்களை விளக்கினார்.

