இவ்வாண்டு 12,176 மியன்மார் நாட்டவர் மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்

இவ்வாண்டு 12,176 மியன்மார் நாட்டவர் மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2026 - 2:53 pm

1 mins read

கோலாலம்பூர்: அக்டோபர் 31 நிலவரப்படி, இந்த ஆண்டு மொத்தம் 12,176 மியன்மார் குடிமக்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 1,476 கைதிகள் செப்டம்பர் 29ஆம் தேதி மியன்மார் கடற்படைக் கப்பல்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தத் தரவுகள் சம்பந்தப்பட்ட நாட்டால் உறுதிப்படுத்தப்பட்ட குடியுரிமையின் அடிப்படையிலானவை என்றும் ரோஹிங்யா இனத்தவரைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றும் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் கேள்விக்கு உள்துறை அமைச்சு எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளது.

ஐக்கிய நாட்டு அகதிகள் ஆணையத்தின் பதிவுகளின்படி, செப்டம்பர் 30 வரை மலேசியாவில் 133,400 ரோஹிங்யாக்கள் அகதிகளாகவும் தஞ்சம் கோருபவர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 31 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,208 மியன்மார் நாட்டவர்களில் 6,294 பேர் ரோஹிங்யாக்கள் ஆவர்.

செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்ப, குடியுரிமை சரிபார்ப்பும், பயண ஆவணங்களை வழங்க மியன்மார் அரசின் ஒத்துழைப்பும் அவசியம். மேலும், வட்டார ஆட்கடத்தல் கும்பல்கள் மூலம் நிலம், கடல் வழியாக ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்