சோல்: அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் புதன்கிழமையன்று (ஜனவரி 15) கைது செய்யப்பட்டார். அரசாங்க முறைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் அதிகாரிகள் திரு யூனிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று திரு யூன் ராணுவ ஆட்சி சட்டத்தைச் செயல்படுத்தினார்.
சில மணிநேரம் மட்டுமே நீடித்த ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது.
திரு யூன் இருந்த வீட்டின் வளாகத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து அதிகாரிகள் உள்ளே நுழைந்த சில மணிநேரத்துக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவரைக் கொண்டு செல்வதாக நம்பப்படும் வாகனங்கள் அவரின் அதிகாரத்துவ இல்லத்திலிருந்து புறப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
பின்னர் அவர், இதன் தொடர்பில் விசாரணை நடத்தும் ஊழல் தடுப்பு அமைப்பின் அலுவலகத்தைச் சென்றடைந்தார்.
திரு யூனுக்கு விடுக்கப்பட்ட கைதாணை உள்ளூர் நேரப்படி காலை 10.33 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி 9.33 மணி) செயல்படுத்தப்பட்டதாக தென்கொரியாவின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் தெரிவித்தது. திரு யூனை 48 மணிநேரத்துக்கும் தடுத்து வைக்க விசாரணை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. தலைநகர் சோலுக்கு அருகே இருக்கும் குவாச்சியோன் நகரில் இருக்கும் தங்களின் அலுவலகத்தில் திரு யூனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் கைது செய்த பிறகு மேலும் 20 நாள்கள் வரை திரு யூனைத் தடுப்புக் காவலில் வைக்க விசாரணை அதிகாரிகள் இன்னொரு கைதாணைக்குக் கோரிக்கை விடுக்கவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
வன்முறை வெடிப்பதைத் தடுக்கும் நோக்கில் தாம் சரணடைந்ததாக திரு யூன், கைதான பிறகு காணொளிவழி உறுதிப்படுத்தினார். அந்தக் காரணத்துக்காகவே அவர் கைது செய்யப்படுவதற்கு ஒப்புக்கொண்டார் என அவரின் வழக்கறிஞர் முன்னதாகக் கூறியிருந்தார்.
புதன்கிழமை காலையிலிருந்தே 3,000க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் திரு யூனின் இல்லத்துக்குள் நுழைந்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
திரு யூன் கைது செய்யப்பட்டது, தென்கொரியாவில் நீதிக்கு இன்னமும் மதிப்பிருப்பதைக் குறிப்பதாக அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவர் சொன்னார் என்று பிபிசி ஊடகம் தெரிவித்தது.