நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் யூன்

2 mins read
98cf2073-2be4-4d13-9780-3b02b280e551
இரண்டாவது நாடாளுமன்ற வாக்கெடுப்பில் திரு யூன் தோல்வியடைந்ததைக் கொண்டாடும் ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து திரு யூன், இடைக்காலப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கொரியப் பிரதமர் ஹான் டுக்-சூ தற்காலிகமாக அதிபர் பொறுப்பை வகிப்பார்.

வாக்கெடுப்புக்குப் பிறகு ஆறு மாத காலத்துக்குள் தென்கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவது குறித்து முடிவெடுக்கவேண்டும். நீதிமன்றத்தின் முடிவு திரு யூனுக்கு சாதகமாக இல்லாமல் அவர் பதவி விலக நேரிட்டால் 60 நாள்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

திரு யூனின் ஆளும் மக்கள் சக்திக் கட்சியில் (பிபிபி) விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதற்கு சாதகமாக 204 வாக்குகள் சேர்ந்தன, அவருக்கு சாதகமாக 85 வாக்குகள் சேர்ந்தன.

இந்த வாக்கெடுப்பு, திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் நடத்தப்பட்ட இரண்டாவது நாடாளுமன்ற வாக்கெடுப்பாகும். கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) நடந்த முதல் வாக்கெடுப்பு முடிவுகள் அவருக்கு சாதகமாக அமைந்தன.

இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடைபெறவிருந்ததை முன்னிட்டு இந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் தலைநகர் சோலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தென்கொரியாவின் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே திரண்டதாக பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்தன.

பிற்பகலிலிருந்து திரு யூன் பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் கொடுத்து வந்தனர். குறைந்தது 200,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்று தாங்கள் எதிர்பார்த்ததாக சோல் காவல்துறை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சோலின் குவங்ஹுவாமுன் (Gwanghwamun) சதுக்கத்துக்கு அருகே திரு யூனுக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சில மணிநேரம் மட்டுமே நீடித்த ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்திய பிறகு திரு யூன் சர்ச்சைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்