சோல்: நாட்டின் பாதுகாப்பு கருதி அதிபர் யூன் சுக் இயோல் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என தென்கொரிய ஆளும் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் ஹான் டோங் ஹூன் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் பேசிய திரு ஹான், “தற்போது எழுந்துள்ள நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கையில், நாட்டைக் காப்பாற்ற அதிபர் யூன் சுக் இயோலின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
“ராணுவ ஆட்சி போன்ற மிதமிஞ்சிய நடவடிக்கையில் திரு யூன் மீண்டும் ஒருமுறை இறங்கினால் அது கொரிய குடியரசையும் அதன் மக்களையும் பேராபத்தில் தள்ளிவிடும்.
“சட்டவிரோத ராணுவ ஆட்சி தவறானது என்று திரு யூன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அத்துடன், சட்டவிரோதமாக ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்.
“டிசம்பர் 3ஆம் தேதி முக்கிய அரசியல் புள்ளிகளைத் தனியாக ஓரிடத்தில் அடைத்து வைக்கும் நோக்குடன் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார் என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது,” என்று தமது உரையில் திரு ஹான் குறிப்பிட்டார்.
இருப்பினும், சனிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் அதிபர் பதவி நீக்க மசோதா மீதான வாக்கெடுப்பு குறித்த ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் நேரடியாக எதனையும் தெரிவிக்கவில்லை.
அதிபர் யூன், கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) திடுதிப்பென்று ராணுவ ஆட்சிக்கான சட்டத்தை அறிவித்து நாட்டை அதிர்ச்சியடையச் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலான எம்பிக்கள் அந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததால் ஆறு மணி நேரத்தில் அதிபரின் அந்த உத்தரவு நீக்கப்பட்டது.
ராணுவ ஆட்சியை அறிவித்த பின்னர் ‘அரசாங்க எதிர்ப்பு சக்திகள்’ என்ற பெயரில் பல முன்னணி அரசியல் தலைவர்களைக் கைது செய்ய திரு ஹூன் உத்தரவிட்டதாக கட்சித் தலைவரான திரு ஹான் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிபரை பதவி நீக்குவதற்கான மசோதாவை ஆதரித்து வாக்களிக்க முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தயாராகி வருகிறது. இதர எதிர்க்கட்சிகளும் அதனுடன் கைகோத்து உள்ளன.