சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் பதவிநீக்கம் உறுதியாகிவிட்டது.
யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தியது செல்லுபடியாகும் என்று அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து யூன் உடனடியாக அதிபர் பதவியிலிருந்து விலகவேண்டும்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி திரு யூன் தென்கொரியாவில் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார். அதனால் அரசியல் ரீதியான குழப்பநிலை அந்நாட்டில் உருவானது.
சில மணிநேரம் கழித்தே திரு யூன் முடிவை மாற்றிக்கொண்டார். பிறகு அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்த டிசம்பர் 14ஆம் தேதியன்று தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றத்தின் எட்டு நீதிபதிகளும் அதை ஏற்றுக்கொண்டனர். அவர் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தி அரசியலமைப்பையும் சட்டங்களையும் மீறியதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
திரு யூன் பதவி விலகுவதைத் தொடர்ந்து இன்னும் 60 நாள்களுக்குள் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நடக்க வேண்டும். அப்படியென்றால் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்துக்குள் தேர்தல் நடைபெற வேண்டும்.
தென்கொரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியுங், அடுத்த அதிபர் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
பதவி விலகும் திரு யூன், முன்னாள் மூத்த அரசாங்க வழக்கறிஞராவார். பல முக்கியமான வழக்குகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் பிரபலமடைந்தார்.
முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரமும் அவற்றில் அடங்கும். அந்த விசாரணையையடுத்து பார்க் கியூன் ஹை மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பில் வேறு சில குற்றச்சாட்டுகளையும் திரு யூன் எதிர்நோக்குகிறார்.