சோல்: தென்கொரியாவில் காவல்துறை, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த அதிகமான இளம் அதிகாரிகள் வேலையிலிருந்து விலகி வருகின்றனர். வேலைப் பளுவும் குறைந்த சம்பளமும் இதற்கு காரணம் என்று செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்குள் பணியாற்றிய அதிகாரிகள் தாமாக முன்வந்து பதவி விலகியிருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 2022ல் 155ஆக இருந்தது. இது, 2023ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகி 303க்கு அதிகரித்துள்ளது.
இதே போன்று பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றிய தீயணைப்பாளர்கள் 125 பேர் 2023ஆம் ஆண்டில் வேலையைக் கைவிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டில் 22ஆக இருந்தது.
இவ்வாண்டின் முதல் பாதியில் மட்டும் 162 காவல் அதிகாரிகளும் 60 தீயணைப்பாளர்களும் வேலையிலிருந்து விலகியிருக்கின்றனர்.
வேலையைக் கைவிடும் இளம் அதிகாரிகளின் விகிதமும் உயர்ந்து வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் காவல்துறையில் பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றி விலகிய மொத்த ஊழியர்களில் இளம் அதிகாரிகள் மட்டும் 60 விழுக்காடாகும்.
இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 72.7 விழுக்காடாகவும் 2024ஆம் ஆண்டில் முதல் பாதியில் 77.1 விழுக்காடாகவும் கூடியுள்ளது.
இதே போன்ற நிலை தீயணைப்புத் துறையிலும் காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் அத்துறையிலிருந்து விலகிய இளம் தீயணைப்பாளர்கள் எண்ணிக்கை 2022ல் 62.8 விழுக்காட்டிலிருந்து 2023ஆம் ஆண்டில் 72.2 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது. இதுவே, 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் 75 விழுக்காடாக கூடியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த சம்பளம், வேலைப் பளு காரணமாக இளம் அதிகாரிகள் வேலையைக் கைவிடுகின்றனர்.
தற்போது காவல்துறையில் முதல் ஆண்டு அதிகாரிகளுக்கு மாதம் 1.87 மில்லியன் யுவான் (S$1,800) சம்பளம் வழங்கப்படுகிறது. இது, நாட்டின் சராசரி குறைந்தபட்ச சம்பளத்தைவிடக் குறைவு என்று சொல்லப்படுகிறது. தீயணைப்பு வீரர்களும் இதே போன்று குறைவான சம்பளம் பெற்று வருகின்றனர்.

