தேசிய நல்லிணக்கத்தைத் தக்கவைக்க இளையர்களே முக்கியம்: மலேசிய அமைச்சர் தௌஃபிக்

தேசிய நல்லிணக்கத்தைத் தக்கவைக்க இளையர்களே முக்கியம்: மலேசிய அமைச்சர் தௌஃபிக்

2 mins read
552173b1-8ed5-49f3-acc3-750cda2a7968
வெவ்வேறு இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த சமூகங்களை இணைக்கும் பாலமாக இளைய தலைமுறை செயல்பட வேண்டும் என்றும் மலேசியர்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் தூதுவர்களாக அவர்கள் திகழ வேண்டும் என்று இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் முகம்மது தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார். - படம்: பெர்னாமா

அலோர் ஸ்டார்: மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் இளையர்கள் ஒரு முக்கியமான சொத்து என்று இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் முகம்மது தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த சமூகங்களை இணைக்கும் பாலமாக இளைய தலைமுறை செயல்பட வேண்டும் என்றும் மலேசியர்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் தூதுவர்களாக அவர்கள் திகழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“மலேசியா பல இனங்கள் மற்றும் சமயங்களைக் கொண்ட ஒரு பன்முகச் சமூகம். நாம் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணுவதில் இளையர்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர்,” என்று திங்கட்கிழமையன்று (மார்ச் 9) அல் ஹிக்மா கல்வி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் பேசினார்.

வருங்காலத் தலைவர்கள் சிறந்த பண்புடனும் அடையாளத்துடனும் உருவாவதற்கு, இன்றைய இளையர்கள் உலகியல் மற்றும் ஆன்மீக அறிவை ஆழமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தௌஃபிக் குறிப்பிட்டார்.

இத்தகைய முயற்சிகள் ரமலான் மாதத்தோடு மட்டும் நின்றுவிடாமல் ஆண்டு முழுவதும் தொடருவதை உறுதிசெய்ய, பிரதமர் துறையின் சமய விவகாரப் பிரிவு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தமது அமைச்சு தொடர்ந்து பணியாற்றும் என்று அமைச்சர் தௌஃபிக் கூறினார்.

“இந்தத் திட்டம் ஒருமுறை மட்டும் நடக்கும் நிகழ்வாக இருக்காது. தலைமைத்துவப் பயிற்சி மற்றும் விளையாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் இதன் மூலம் முன்னெடுக்கப்படும்.

“இளையர் குழுக்களுக்கு நாங்கள் பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறோம். இதன் மூலம் தலைமைத்துவ முயற்சிகளுடன் சேர்த்து, அடிமட்ட அளவிலான விளையாட்டுத் திட்டங்களை, குறிப்பாக பள்ளிவாசல்களில் ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.

மேலும், மற்ற வழிபாட்டுத் தலங்களுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, முஸ்லிம் அல்லாத இளையர் குழுக்களை உருவாக்குவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத் திட்டங்களை விரிவுபடுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்