ஜோகூர் பாரு: மலேசியாவில் கோழியின் எலும்புத் துண்டுகள் போன்ற மிச்சம் வைத்த உணவை வீடில்லாத ஆடவர் ஒருவருக்குக் கொடுத்த மூன்று சிறுவர்கள்மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய அது தொடர்பான காணொளியை அடுத்து வந்த புகார்களை முன்னிட்டு விசாரணையைத் தொடங்கியதாக மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களைக் கவர வசதி குறைந்தோரின் நிலைமையைப் பயன்படுத்துவது போன்ற செயல்களைக் கடுமையாகக் கருதுவதாக ஆணையம் சொன்னது.
“தனிநபரின் கண்ணியத்தைக் குறைக்கவோ அவமதிக்கவோ செய்யும் உள்ளடக்கங்களை விநியோகிப்பது நெறியில்லாத செயல் மட்டுமல்ல, அத்தகைய மனிதாபிமானம் அற்ற கலாசாரம் சமூகத்தில் உருவாவதையும் தூண்டுகிறது,” என்று ஆணையம் சுட்டியது.
பொது ஒழுங்கைச் சீர்குலைக்கக்கூடிய அதுபோன்ற சமூக ஊடக காணொளிகளைப் பரப்பவேண்டாம் என்றும் ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் இளையர்கள் மூவர் நன்மை செய்யவேண்டும் என்று கூறி கோழியைச் சாப்பிட்ட பின் அதன் எலும்புத் துண்டுகளை வீணாக்கவேண்டாம் என்று அவற்றைச் சோற்றுப் பொட்டலத்தில் வைத்து வீடில்லாத ஆடவர் ஒருவருக்குக் கொடுக்கின்றனர்.
அதை வாங்கிய ஆடவர் நன்றி கூறியபோது அவர் சாப்பிடுவது பதிவுசெய்யப்படவில்லை. ஜோகூர் பாருவில் சம்பந்தப்பட்ட ஆடவரை இளையர்கள் அணுகியதாகத் தெரிகிறது.
இணையவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான இளையர்கள் பின் காணொளியை அகற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
இளையர்கள் பின்னர் பதிவேற்றிய காணொளியில் உணவுப் பொட்டலத்தை வாங்கிய ஆடவர் காணொளிக்காக மட்டும்தான் அவ்வாறு செய்ய ஒப்புக்கொண்டார் என்றும் ஆடவருக்கு அவர்கள் பின்னர் இரு கோழித் துண்டுகளுடன் சரியான உணவை அளித்தனர் என்றும் கூறினர்.

