கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஊழலைப் புறக்கணித்து தூய்மையான, பொறுப்பான ஆட்சிமுறையை அமைப்பதில் முன்னிலை வகிக்கும்படி இளையர்களிடம் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு நேர்மையே அடித்தளம் என்றார் அவர்.
“ஊழல் போதும் என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். இனிமேல் கடத்தல் இருக்கக்கூடாது, கடத்தல் கும்பல்கள் இருக்கக்கூடாது,” என்று அனைத்துலக இளம் எதிர்காலத் தலைவர் உச்சநிலைச் சந்திப்பின்போது பிரதமர் அன்வார் கூறினார்.
நாட்டின் தலைமைத்துவம் தூய்மையாகவும் முறைகேடான பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாகவும் இருக்கவேண்டும்.
“எனவேதான் நான் மீண்டும் நேர்மையான ஆட்சிமுறையை வலியுறுத்துகிறேன். தலைமைத்துவம் நேர்மையாக இருக்கவேண்டும். குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படும் கலாசாரத்தைக் களையவேண்டும்,” என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.
வரிகளை உயர்த்துவதன் மூலம் பொதுச் சேவைகளுக்கான நிதியைப் பெற முடியும் என்ற வழக்கமான பொருளியல் யோசனையை மாற்ற வேண்டும் என்றார் அவர்.
தவறாகக் கையாளப்பட்ட பில்லியன்கணக்கான நிதிகள் அண்மையில் மீட்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, இளையர் நலன் ஆகியவற்றுக்கு அரசாங்கம் அந்தத் தொகையைச் செலவு செய்வதைப் பகிர்ந்துகொண்டார்.
மலேசிய அரசாங்கம், புதிய வரிகளை அறிவிக்க அவசரப்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல், வலுவிழந்த நிர்வாகம் ஆகியவை சரிசெய்யப்படும்வரை அரசாங்கம் புதிய வரிகளை விதிக்காது.
தொடர்புடைய செய்திகள்
கடத்தல், ஊழல் ஆகியவற்றை முடக்குவதன் மூலமே பெரும்பாலான நிதி சேர்க்கப்படுகிறது என்ற அவர், கூடுதல் வரிகளை விதிக்காமலே செயல்திறன்மிக்க அரசாங்கத்தால் தேவையான வளங்களை வழங்க முடியும் என்றார்.
ஊழல், கடத்தல் ஆகியவற்றைத் தடுத்ததன் மூலம் ஈராண்டுகளில் 15.5 பில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க முடிந்தது என்று நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, அன்வார் 470 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை அறிவித்தார்.