குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஸம்ரியும் தமீமும் நாடு திரும்ப வேண்டும்: துணை அமைச்சர் குலசேகரன்

குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஸம்ரியும் தமீமும் நாடு திரும்ப வேண்டும்: துணை அமைச்சர் குலசேகரன்

2 mins read
9322c2b6-3ac4-4fcb-8c3f-a0830cc34160
ஸம்ரி வினோத் (இடம்), தமீம் தஹ்ரி - படம்: த ஸ்டார்

ஈப்போ: சமயத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஸம்ரி வினோத்தும் தமீம் தஹ்ரியும் மலேசியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் எம் குலசேகரன் கூறியிருக்கிறார்.

இருவரும் தவறெதுவும் செய்யவில்லை என்றால் நாடு திரும்ப வேண்டும் என்றும் விசாரணையையும் நீதியையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? அப்படியென்றால் மறைப்பதற்கு எதுவோ இருக்கிறது என்று பொருள்,” என்றார் அவர். ஈப்போவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் சனிக்கிழமை (மார்ச் 14) காலை நடைபெற்ற ஒற்றுமைப் பயணம் 2.0 நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களிடம் திரு குலசேகரன் பேசினார்.

ஸம்ரியும் தமீமும் தாய்லாந்திற்குத் தப்பியோடிவிட்டதாய் நம்பப்படுவதாகக் காவல்துறைத் தலைவர் முகம்மது காலித் இஸ்மாயில் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

புலன்விசாரணைகள் முடிவுற்ற நிலையில், அவர்கள்மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் (பிப்ரவரி) ஏழாம் தேதி சோகோ வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தின் தொடர்பில் கூறிய கருத்துக்காக ஸம்ரி விசாரிக்கப்பட்டார்.

கெடா மாநிலத்தின் லங்காவியில் ஸ்ரீ மகா முனீஸ்வரர் கோயில் முன்பிருந்த இடத்தில் தமீம் ஒரு சூலத்தைச் சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இருவரையும் நாட்டுக்குத் திரும்ப அழைத்துவர மலேசிய காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

மலேசிய, தாய்லாந்துக் காவல்துறையினருக்கு இடையே அணுக்கமான உறவு நிலவுவதை அவர் சுட்டினார்.

“இருவரும் நாட்டுக்குப் பல பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கொடுத்துப் பெரிய தலைவலியாக இருந்துள்ளனர். அவர்கள் மறைந்து வாழலாம். ஆனால் தப்பித்துவிட முடியாது. வெகு விரைவில் அவர்கள் பிடிபடுவர்,” என்றார் அவர்.

அனைத்து இன, சமயங்களின் தேவைகளையும் அரசாங்கம் நிறைவேற்றும் என்று திரு குலசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்தே பல இந்துக் கோயில்கள் இருந்துவந்துள்ளதை அவர் சுட்டினார். அவை அனுமதிக்கப்பட்டபோதும் அவற்றுக்கு நிலப் பட்டா எதுவும் கொடுக்கப்படவில்லை என்று திரு குலசேகரன் குறிப்பிட்டார்.

மாநில அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் கோயில்கள் இடிக்கப்படுவதைத் தடுக்க ஒரு குழுவை அமைத்துள்ளதற்காகப் பேராக் அரசாங்கத்தை அவர் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்