கீவ்: இந்தியப் பிரதமரின் ரஷ்யப் பயணத்தை உக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி சாடியுள்ளார். அது அமைதி முயற்சிகளுக்குப் பேரடி என்றார் அவர்.
“உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் ஆக மோசமான குற்றவாளியை மாஸ்கோவில் கட்டி அணைப்பதைப் பார்ப்பது மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது. அமைதி முயற்சிகளுக்கு அது மிகப் பெரிய அடி,” என்று திரு ஸெலன்ஸ்கி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவுசெய்திருந்தார்.
அந்தப் பதிவில், கியவ்வில் உள்ள குழந்தை மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைக் காட்டும் படங்களும் அடங்கியிருந்தன. அந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவுக்குப் பயணம் மேற்கொண்ட இரண்டாம் நாளன்று திரு ஸெலன்ஸ்கியின் கருத்துகள் வந்தன.
திரு மோடியின் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், ரஷ்யாவைத் தனிமைப்படுத்த எண்ணும் அமெரிக்கா, அந்தப் பயணத்தின் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.
திரு மோடி, ஜூலை 8ஆம் தேதி தனிப்பட்ட இரவு விருந்துக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.
ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரொவ், திரு மோடியை மாஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு குறித்து வாஷிங்டன் ஏற்கெனவே அக்கறை தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மேத்தியு மில்லர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தியா போரின் தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகள் விதிப்பதைத் தவிர்த்துள்ளது.
அந்த விவகாரத்தின் தொடர்பில், அது ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வாக்கெடுப்பிலிருந்தும் விலகியது. இருப்பினும், பூசலுக்குத் தீர்வுகாண அரசதந்திரத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

