தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனிய அதிபரின் வீடு ஏலம்

1 mins read
d1472d44-4bf5-446b-b22b-a9a4e70d800b
ஏலம் விடப்பட்ட வீட்டில்தான் விடுமுறைக்காலங்களில் அதிபர் ஸெலென்ஸ்கியின் குடும்பத்தினர் ஓய்வெடுப்பர் எனக் கூறப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: கிரைமியாவில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டை ஆக்கிரமிப்பு ரஷ்ய அதிகாரிகள் ஏலத்தில் விற்றுவிட்டனர்.

அவ்வீட்டில்தான் விடுமுறைக்காலங்களில் ஸெலென்ஸ்கியின் குடும்பம் ஓய்வெடுக்கும் எனக் கூறப்பட்டது.

அந்த 120 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட வீடு 44.3 மில்லியன் ரூபிளுக்கு (S$657,000) ஏலம் போனது என்று ரஷ்ய அரசாங்கத்தின் ‘டாஸ்’ ஊடகத்தைச் சுட்டி, ஜெர்மானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது ஏலத்தின் தொடக்க விலையைப்போல இரு மடங்கு என்றும் இரண்டு பேர் மட்டுமே ஏலத்தில் பங்கெடுத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் ஸெலென்ஸ்கியின் மனைவி ஒலினா 2013ஆம் ஆண்டு அவ்வீட்டை வாங்கினார். ஆயினும், அதற்கு மறுஆண்டே ரஷ்யா அப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. அப்போது, ஸெலென்ஸ்கி நடிகராகத் தம் பணியைத் தொடர்ந்து வந்தார்.

கிரைமிய நாடாளுமன்றத்தில் சென்ற ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தை அடுத்து, அவ்வீடு இவ்வாண்டுத் தொடக்கத்தில் அபகரிக்கப்பட்டது.

அவ்வீட்டை ஏலத்தில் வாங்கிய ஓல்கா லிப்போவெட்ஸ்காயா, அதன் அமைவிடத்திற்காகவும் கிரைமியாவின் காலநிலைக்காகவும்தான் அதனை வாங்கியதாகக் கூறினார்.

அந்த மூவறை வீட்டிலிருந்து பார்த்தால் கருங்கடலும் கடைசி ஸார் மன்னரான இரண்டாம் நிக்கலசின் லிவாடியா அரண்மனையும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்