உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடக்கம்தான் என்றும் மற்ற நாடுகளையும் கைப்பற்ற அந்நாடு திட்டமிட்டுள்ளது என்றும் உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.
"எங்களைப்போல, வாழ்வில் வெற்றியை நம்பும் மற்ற அனைத்து நாடுகளும் எங்களுடன் இணைந்து சண்டையிட வேண்டும். அந்நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும். ஏனெனில், நாங்கள்தான் வரிசையில் முதலாவதாக உள்ளோம். அடுத்து எந்த நாடோ," என்று காணொளிவழி உரையாற்றியபோது அதிபர் ஸெலன்ஸ்கி சொன்னார்.
இருநாட்டு அதிபர்களுடன் ஐநா தலைமைச் செயலாளர் சந்திப்பு
இச்சூழலில், போரை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வரும் வாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினையும் உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியையும் தனித்தனியே சந்தித்துப் பேசவுள்ளார்.
திரு குட்டரஸ் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவை நாளை மறுநாள் சந்திப்பார் என்பதை கிரெம்ளின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். அதன்பின், புட்டின் அவரைச் சந்திப்பார். பின்னர் வியாழக்கிழமை உக்ரேன் செல்லும் திரு குட்டரஸ், அங்கு அதிபர் ஸெலன்ஸ்கியையும் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவையும் சந்திப்பார்.

