கியவ்: ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரேனிய அதிபர் வொலோடிமியர் ஸெலென்ஸ்கி அமெரிக்கா செல்கிறார்.
திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 18) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அவர்கள் சந்தித்துப் பேசுவார்.
ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமைதி உடன்படிக்கை தொடர்பாக அவர்கள் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுக்குச் சாதகமான போர் நிறுத்த நிபந்தினைகளை ஏற்க உக்ரேனுக்கு அதிபர் டிரம்ப் நெருக்குதல் அளிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முக்கியமான தருணத்தில் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவு அளிக்க பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பின்லாந்து ஆகியவற்றின் தலைவர்களுடன் நேட்டோவும் செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) அதிகாலை 1.15 மணிக்கு அதிபர் டிரம்ப்பும் திரு ஸெலென்ஸ்கியும் சந்திப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமியர் புட்டினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசினார்.
42 மாதங்களாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டதாகவும் பலர் தங்கள் உடைமைகளையும் வசிப்பிடங்களையும் இழந்து தவிப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதிபர் டிரம்ப்புடனான சந்திப்பின்போது அதிபர் புட்டின் முன்வைத்த பரிந்துரைகளை அதிபர் ஸெலென்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார்.
அதிபர் புட்டின் முன்வைத்த பரிந்துரைகளில் உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் முழுவதையும் உக்ரேன் ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அடங்கும்.
உண்மையான பேச்சுவார்த்தைகள் தேவை என்று ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) அதிபர் ஸெலென்ஸ்கி பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் தெரிவித்தார்.
உக்ரேனின் நிலப்பகுதியை வேறொரு நாட்டுக்கு விட்டுக்கொடுக்க உக்ரேனிய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காது என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து கலந்துரையாட தம்மை அழைத்த அதிபர் டிரம்ப்புக்கு அதிபர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதற்கிடையே, அதிபர் ஸெலென்ஸ்கி மனம் வைத்தால் ரஷ்யாவுக்கு எதிரான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ரஷ்யா முன்பு கைப்பற்றிய கிரைமியாவை உக்ரேன் மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.
அதுமட்டுமல்லாது, போரை நிறுத்த வேண்டுமாயின் நேட்டோவில் இணையும் திட்டத்தை உக்ரேன் கைவிட வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.