கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோரை தான் துளியும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
இது மலேசியாவில் இன வெறுப்புணர்வு தோன்றுவதற்கான அடையாளம் என்று குறிப்பிட்ட திரு அன்வார், இதற்கு உதாரணங்களாக குறிப்பிட்ட இனத்தவரின் அங்க அடையாளங்களைக் கேலி செய்வது, கோணலாக இருக்கும் கண்கள், கறுத்த உடல் நிறத்துடையோர் ஆகியோருடன் ஒத்துழைக்க மறுப்பது போன்றவற்றை சுட்டினார்.
“இஸ்லாமிய மதம் ஒருவரின் உடல் நிறத்தை அவமதிக்க அனுமதிக்கிறதா. கறுத்த உடல் நிறமும், தடித்த உதடுகளையும் உடைய பிலால் பின் ராபா என்பவரை நபிகள் நாயகத்தின் குடும்பத்தார் தங்களைச் சேர்ந்த ஒருவராக அரவணைக்கவில்லையா,” என தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1ஆம் தேதி) ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரு அன்வார் கேள்விக் கணைகள் தொடுத்தார்.
அந்த நிகழ்ச்சியில் மலேசிய தற்காப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டின், உயர்கல்வி அமைச்சர் டாக்டர் ஸாம்பிரி அப்துல் காதிர், பல்கலைக்கழக துணை வேந்தர் லெஃப்டினண்ட் ஜெனரல் மார்ட்சுக்கி முகம்மது ஆகியோர் பங்கேற்றனர்.
டிஏபி எனப்படும் ஜனநாயக செயல் கட்சியுடன் தான் நல்லுறவு கொண்டுள்ளதை தான் சீனர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக சில கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என திரு அன்வார் சொன்னார்.
“நாம் மனிதநேயம் கொண்டுள்ளோம். மலாய்க்காரர்களிடம் தனித்துவமாக இருப்பது என்ன என்று வினவிய அன்வார், மலாய்க்காரர்களிடம் மிக உயர்ந்த கலாசாரம், மிக உயர்ந்த பழக்கவழக்கங்கள், நடத்தை ஆகியவை உள்ளன. எங்கள் கண்ணியம், கொள்கைகள், சமயம், கலாசாரம் ஆகியவற்றை நீங்கள் குறைக்கும் வகையில் நடந்துகொள்ளாமல் இருக்கும்வரை நாங்கள் அனைவரையும் வரவேற்போம்,” என்று திரு அன்வார் தெளிவுபடுத்தினார்.