ஹராரே: சிம்பாவேயில் தேவாலய பக்தர்கள் பயணிகளாக அமர்ந்திருந்த மினிபஸ் வாகனம் ஒரு லாரியுடன் நேரடியாக மோதியதில் 27 பேர் மரணமடைந்தனர் என்று அந்நாட்டுக் காவல்துறை சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) தெரிவித்தது.
அந்நாட்டில் நடந்துள்ள மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
தலைநகர் ஹராரேயிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் தெற்குப் பகுதியில் உள்ள சிவ்வு எனும் இடத்தின் அருகில் விபத்து சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நடந்ததாகத் தெரிகிறது.
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட அந்த லாரி, மற்றொரு வாகனத்தைக் கடந்து சாலையில் முந்திக்கொண்டு செல்ல முயன்றபோது அது மினிபஸ்சை மோதியதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
அந்த வாகனத்தில் இருந்த பக்தர்கள் ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்த மினிபஸ்சில் சென்றுகொண்டிருந்தனர்.
அந்த இரு வாகனங்களிலும் இருந்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. விபத்தில் எழுவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் மினிபஸ் கறுகிப்போன நிலையில் காணப்பட்டது. லாரி சாலையின் மறுபக்கம் இருந்தது.
லாரியுடன் நேரடியாக மோதிய மினிபஸ் வாகனம் பலமுறை குப்புறக் கவிழ்ந்து சாலையின் கீழ் இருந்த ஏரியில் விழுந்து நின்றுள்ளது.


