பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்களுக்காக ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த தமிழ்மொழி, இலக்கியக் கருத்தரங்கு, இளையர்கள் தமிழிலக்கியத்தைச் சுவைக்கவும் அதனைப் போற்றவும் நல்வாய்ப்பளித்தது.
இம்மாதம் 15ஆம் தேதியன்று ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பினரும் பங்கேற்றனர்.
இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன என்பதை விளக்கியும் இலக்கியத்தை நாம் எவ்வாறு மேன்மேலும் போற்றலாம் என்பதைப் பற்றி பேசியும் மாணவர்கள் வியக்க வைத்தனர்.
இலக்கியத் திறனாய்வும் அழகியலும் என்ற கருப்பொருளுடன் இடம்பெற்ற இலக்கியத் திறனாய்வுப் பயிலரங்கைப் புகழ்பெற்ற தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் வழிநடத்தினார்.
இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு வென்ற ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரி இரண்டாமாண்டு மாணவரான வாசுதேவன் அஷ்வின்ராஜ், 18, "கவிதைகளில் கூறவரும் கருத்து மறைமுகமாக இருப்பதால் கவிதைகளை ஆராய்வதிலேயே ஒரு தனி சுவாரசியம் இருப்பதாக உணர்கிறேன்," என்று கூறினார்.
"ஒரு மாணவராக ஒரு கவிதையையோ சிறுகதையையோ படிப்பது மட்டுமல்லாமல், கவிஞரோ எழுத்தாளரோ எவ்வாறு சிந்தித்திருப்பார் என்பதையும் நமக்கும் என்னென்ன சிந்தனைகள் தோன்றுகின்றன என்பதையும் ஆராயும்போது தமிழ் இலக்கியத்தைப் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது," என்றார் இரண்டாம் பரிசு வென்ற, அதே ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவர் ரகுநந்தன், 19.
"பயிலரங்கில் மாணவர்களின் செயல்திறன் மிக அழகாக வெளிப்பட்டது. எதிர்காலத்தில் மாணவர்களும் தமிழ்மொழிக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே இதுபோன்ற பயிலரங்குகளின் முதன்மை நோக்கமாகும்," என்று கவிஞர் கடற்கரய் சொன்னார்.

