சிங்கப்பூரில் கடந்த ஈராண்டுகளில் மின்சிகரெட் பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது என்று 2022ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, இளையரிடையே கடந்த சில ஆண்டுகளாக மின்சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் மின்சிகரெட் விற்பனையும் பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளபோதும் இணையம் வழியாக அது இளையரின் கைகளைச் சென்றடைந்துவிடுகிறது.
பேரச்சுறுத்தலாக விளங்கும், பெரிதும் கவலைதரும், இப்போக்கு குறித்து ஆராய்கிறது இவ்வார இளையர் முரசு.
பலனைக் காட்டிலும் பாதிப்பு அதிகம்
இளையர்கள் சிலர் நாடும் ஒரு புதிய கையடக்க நண்பனாகிவிட்டது 'மின்சிகரெட்'. கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்பாடு தலைதூக்கி வருகிறது.
விதவிதமான மணம், சிகரெட்டைக் காட்டிலும் ஆரோக்கியமானது, புகையிலை, சிகரெட்டை விட குறைவாகத் தீங்கிழைக்கக் கூடியது என மின்சிகரெட் பற்றிய கருத்துகள் சிலரிடையே நிலவி வருகின்றன.
அமீர் (உண்மைப் பெயரன்று) தன் நண்பர்களுடன் இருப்பதற்காகவே சிகரெட், மின்சிகரெட் இரண்டையும் பயன்படுத்தத் தொடங்கினார். தனது 16வது வயதில் புகைபிடிக்கத் தொடங்கிய அவர், மூன்றாண்டுகளுக்கு முன்னர் சமூக ஒன்றுகூடல்களில் மின்சிகரெட்டின் பயன்பாடு அதிகரித்துள்ளதைக் கவனிக்கத் தொடங்கினார்.
அதன் வாசனை கருதி சில நாள்களுக்கு சிகரெட் பிடிப்பதற்குப் பதிலாக மின்சிகரெட்டைப் பிடித்துப் பார்த்தார் அமீர். மூன்று முறை அவ்வாறு செய்ததை அடுத்து திடீரென அவருக்கு மூச்சுக்குழல் அழற்சி ஏற்பட்டது.
ஒரு வாரத்தில் சிகரெட் வாங்கச் செலவிடும் பணத்தில் ஒரு மாதம் நீடிக்கும் வீசியெறியக்கூடிய மின்சிகரெட் கிடைப்பதாக அமீர் தெரிவித்தார். இதனாலேயே இளையர் மின்சிகரெட்டை நாடக்கூடும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து ஒரே மின்சிகரெட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இத்தகைய வீசியெறியக்கூடிய மின்சிகரெட்டைப் பயன்படுத்துவதால் செலவு குறைவு என மற்றொரு முன்னாள் மின்சிகரெட் பயனர் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், மாதந்தோறும் புதுப் பொதியுறைகளை வாங்கி நிரப்ப வேண்டியுள்ளதையும் அவர் சுட்டினார்.
பொதியுறைகளின் விலை அதிகரித்துள்ளதுடன் மலேசியா இவ்வாண்டு மின்சிகரெட்டுக்கான வரியை உயர்த்தியதால், அங்கிருந்து இயங்கிய தனது விநியோகிப்பாளர் விலையை மேலும் உயர்த்திவிட்டதாக அவர் கூறினார்.
இரவுக் கேளிக்கைக் கூடங்கள் உள்படப் பொது இடங்களில் காவல் துறையினர் மின்சிகரெட் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
"சிக்கிவிடுவோம் என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும்," என்றார் அந்த நபர். புகைபிடிக்கும் பழக்கத்தை முழுமையாகக் கைவிட மின்சிகரெட் உதவுவது இல்லை என்று கூறினார் அவர்.
புகைபிடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாக நிறுத்த எண்ணுவோருக்கு, சில மாற்றுத் தெரிவுகள் உண்டு. புகைபிடித்தலுக்கு அடிமையாக்கும் 'நிக்கோட்டின்' வேதிப்பொருளைச் சிறிதளவில் மட்டும் கொண்டுள்ள மிட்டாய்களும் பட்டைகளும் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.
மின்சிகரெட் வழி புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தும் சாத்தியம் குறைவே என்றார் 12 வயது முதல் புகைபிடித்து வரும் 34 வயது ஜான் (உண்மைப் பெயரன்று).
சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை மின்சிகரெட்டின் பொதியுறையில் நிரப்பிப் பயன்படுத்தும் போக்கு கவலைக்குரியது என்று தெரிவித்த அவர், "மின்சிகரெட் பழக்கத்தை யாருக்கும் நான் பரிந்துரை செய்யமாட்டேன். புகைபிடிப்பதாகத் தொடங்கும் பழக்கம், கண்ணுக்குத் தெரியாத வேறு சில ஆபத்துகளில் தள்ளிவிடலாம்," என்றார்.
'டெலிகிராம்' போன்ற தளங்களில் இயங்கும் விநியோகிப்பாளர்களின் மூலம் இளையர்கள் சிலர் மின்சிகரெட்டை வாங்குவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், சிலர் தங்கள் நண்பர்களின் மின்சிகரெட்டுகளை இரவல் பெற்று, கொஞ்ச நேரம் பயன்படுத்துவதும் உண்டு.
சிகரெட்டின் துர்நாற்றம் மின்சிகரெட்டில் இல்லை என்பதால் வேலையிடத்திலும் வீட்டிலும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இருப்பினும், நண்பரின் பொதியுறையில் என்ன இருக்கிறது என்றுகூட தெரியாமல் போகலாம் என்றும் அது போதைப்பொருளாக இருக்கலாம் என்றும் சிலர் உணர்வது இல்லை.
2022ஆம் ஆண்டு 'வேப்பிங்' தொடர்பில் அதிகமானோர் பிடிபட்டனர்
சுகாதார அறிவியல் ஆணையம் வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரப்படி, 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ல் மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதற்காகவும் வைத்திருந்ததற்காகவும் பிடிபட்டோரின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது.
இந்தக் குற்றத்திற்காக 2022ல் 4916 பேர் பிடிபட்டனர்; இந்த எண்ணிக்கை 2020க் 1,266ஆகவும் 2021ல் 4,697ஆகவும் இருந்தது.
மின்சிகரெட்டையும் அதன் பாகங்களையும் விற்றதற்காக 2022ல் பிடிபட்டோரின் எண்ணிக்கை 17. அவர்களில் ஐவர் சிறைக்குச் சென்றனர்.
இருப்பினும், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி நிலைய மாணவர்களிடையே மின்சிகரெட் பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சு கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக 1,000 மாணவர்களில் சராசரியாக எழுவர் பிடிபட்டனர்.
சிங்கப்பூர் சட்டத்துக்குப் புறம்பானது
♦ மின்சிகரெட் வாங்குவோர், பயன்படுத்துவோர், இருப்பில் வைத்திருப்போருக்கு $2,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
♦ மின்சிகரெட் விற்போர், விற்பனைக்காக இருப்பில் வைத்திருப்போர், ஏற்றுமதி இறக்குமதி செய்வோர், விநியோகிப்போருக்கு $10,000 வரையிலான அபராதமோ ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்
தண்டனையோ விதிக்கப்படலாம்.
♦ அடுத்தடுத்த குற்றங்களுக்கு $20,000 வரையிலான அபராதமோ, 12 மாதங்கள் வரையிலான சிறைவாசமோ விதிக்கப்படலாம்.
'நாகரிகத்தின் அடையாளமாகக் கருதப்படா'
திடீரென வீசும் பழ, பனிக்கூழ், மிட்டாய் வாசனைகள் மின்சிகரெட்டின் பயன்பாட்டைக் குறிக்கின்றன என்பதை அண்மையில் அறிந்துகொண்டார் பலதுறைத் தொழிற்கல்லூரி விரிவுரையாளர் திரு கண்ணன் (உண்மைப் பெயரன்று). இதன்மூலம், அவர் நினைத்ததைவிட பள்ளியில் மின்சிகரெட் பயன்பாடு அதிகமாக இருப்பதை அவர் உணர்ந்தார்.
போதைப்பழக்கமும் குடிப்பழக்கமும் இன்னமும் சமூகத் தீங்குகளாகக் கருதப்பட்டு வருகின்றன. ஆனால், மின்சிகரெட் ஒரு சிலரிடையே நாகரிகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது என்றார் திரு கண்ணன்.
"மேற்கத்திய நாடுகள் அளவுக்கு சிங்கப்பூரில் மின்சிகரெட் பழக்கம் இன்னும் பரவலாக இல்லை. எனினும், அதன் தாக்கத்தைக் குறைத்து எடைபோட்டு விடக்கூடாது. இளையரிடையே இதனை முடக்காவிடில், அப்பழக்கம் இயல்பாகிவிடும்," என்றார் அவர்.
உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் திரு முரளி (உண்மைப் பெயரன்று), சிகரெட்டை விட மின்சிகரெட் குறைவான தீங்கு விளைவிக்கிறது என்ற கருத்து இளையரிடையே நிலவுவதாக தெரிவித்தார்.
சிகரெட் புகை துர்நாற்றம் மின்சிகரெட்டுக்கு இல்லாத காரணத்தினால் அதைப் பயன்படுத்தும் மாணவர்களைக் கண்டறிவதில் தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கண்டறியப்படும் மாணவர்கள் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுகின்றனர். ஆனால், கண்டிப்பதுடன் நின்றுவிடுவதால் மாணவர்கள் மின்சிகரெட் பிடிப்பதைத் தொடரவே செய்கின்றனர் என்றார் திரு முரளி.
"மின்சிகரெட் பயன்பாடு தடை செய்யப்பட்டாலும் மாணவர்களிடையே கள்ளத்தனமாக அது தொடர்கிறது," என்றார்.
நேரடியாக விநியோகம் செய்யாமல் சிலர் மாணவர்களின் வாயிலாக மின்சிகரெட்டுகளைப் பள்ளிகளில் விற்று வருவதையும் திரு முரளி கவனித்துள்ளார்.
சக மாணவர்களிடையே இதன் செல்வாக்கைக் கருதி, எளிதில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் மாணவர்களும் விநியோகிக்கச் சம்மதிப்பது கவலைக்குரியது என்றார் அவர்.
சுகாதார அறிவியல் ஆணையம் இந்நிலையைக் களைவதற்கு மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு முரளி கோரிக்கை விடுத்தார்.
மின்சிகரெட் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
மின்சிகரெட்டில் 'நிக்கோட்டின்' உண்டா?
மின்சிகரெட்டில் 'நிக்கோட்டின்' இல்லை என்று சிலர் கூறினாலும் மிதமான அளவு நிக்கோட்டின் இருக்கக்கூடும்.
மின்சிகரெட்டில் உள்ள திரவத்தைப் பற்றவைக்கும்போது மேலும் நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருள்கள் உருவாகி, புகையாக வெளியேறுகின்றன.
மின்சிகரெட்டால் ஏற்படும் மருத்துவச் சிக்கல்களுக்கு எப்போது சிகிச்சை நாடலாம்?
புகைபிடிப்போர் வழக்கமான பரிசோதனைகளுக்குச் செல்வது நல்லது. சாதாரண மூச்சுத் திணறல் எனக் கருதி அலட்சியப்படுத்தப்படுபவை நுரையீரல் வெடிப்பின் பாதிப்பாக இருக்கலாம்.
ஆரம்பகட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் பாதிப்புகளைத் தணித்துவிடலாம்.
மின்சிகரெட் பழக்கத்தைக் குறைப்பதற்கு நிக்கோட்டின் மாற்றுகள் உதவுமா?
மின்சிகரெட், சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் ஒருவரின் உடலில் மூன்று நாள்கள் வரை இருக்கும். மற்றுமொரு வேதிப்பொருளான 'கோட்டினின்' பத்து நாள்கள்வரை இருக்கலாம்.
நிக்கோட்டினுக்கு அடிமையாகி உள்ளோர் சிகரெட் பிடிப்பதை முழுமையாக நிறுத்துவதற்குச் சவாலை எதிர்நோக்கும்போது நிக்கோட்டின் மாற்றுகளை நாடலாம்.
இவை உடலில் குறைந்த அளவிலான நிக்கோட்டினைச் செலுத்தும். ஆயினும், இந்த மாற்றுகளையும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நிறுத்திவிடும் கட்டொழுங்கு ஒருவரிடம் இருப்பது அவசியம்.
தகவல்: மருத்துவர்
டாக்டர் ஹரிஷ் மித்திரன், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி

