சிறைக் கைதிகளின் வாழ்வில் மறுவாழ்வுப் பயணம் முக்கிய அங்கம் வகிக்கிறது.
சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடன் அவர்கள் சமுதாயத்துக்குள் தங்களை ஒன்றிணைத்துக்கொள்ளவும் சிறையில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் துவளாமல் இருக்கவும் சிறை அதிகாரிகள் தன்னலமின்றி கைதிகளை அர்த்தமுள்ள மனிதர்களாக உருமாற்றம் காணும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும் என்ற முனைப்புடன் காத்திருக்கும் 34 வயது ராகினி அன்பழகன் தனது வாழ்க்கைத்தொழிலையும் அதைப் பறைசாற்றும் விதமாக தேர்ந்தெடுத்துள்ளார்.
மறுவாழ்வுப் பிரிவு அதிகாரியாகவும், தலைமைச் சிறைக் காவல் அதிகாரியாகவும் இருக்கும் ராகினி, பெண்கள் சிறைப் பிரிவில் சேவையாற்றி வருகிறார்.
21 வயதுக்கும் கீழ் இருக்கும் கைதி ஒருவர் போதைப் புழக்கத்திற்கு அடிமையானது மட்டுமின்றி அவர் வாழ்க்கையில் பல இன்னல்களையும் கடந்து வந்ததையும் நினைவுகூர்ந்த ராகினி, அவருடன் மறுவாழ்வு அமர்வில் நேரத்தைச் செலவிட்டபோது கைதி ஒரு வெள்ளைத் தாளில் கிறுக்கி எழுதுவதைக் கவனித்தார். கைதிக்குக் கலையில் அதீத ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்த ராகினி பின்னர் அந்தக் கைதி கலை மூலம் தன்னை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியதையும் உணர்ந்தார். இது பிற கைதிகளுக்கும் உதவும் என்று உணர்ந்து 2020ல் 'ஆர்ட்ஸ் பிஹைண்ட் பார்ஸ்' எனும் திட்டம் சிறையில் உதயமானது.
இந்தத் திட்டத்தில் கைதிகள் வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று நாள்கள் கலைச் சிகிச்சை அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர். எழுத்துக்கலை, ஓவியம் வரைவது போன்ற நடவடிக்கைககளில் ஈடுபடும் கைதிகள் ஒருவருக்கொருவர் கற்றுத்தரும் பண்பையும் வளர்த்துக்கொள்கின்றனர். ஐந்து கைதிகளில் தொடங்கி தற்போது 40 கைதிகள் இந்தக் கலை சிகிச்சை மூலம் பயன் கண்டதாக ராகினி கூறினார்.
பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து வரும் பெண் சிறைக் கைதிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் சிறையிலிருந்து விடுபட்டவுடன் மீண்டும் சமுதாயத்தில் ஒருங்கிணைக்க தோள் கொடுக்கிறார் ராகினி. பெற்றோர் இருவரும் முன்பு ராணுவத்தில் பணிபுரிந்ததைக் கண்டு வளர்ந்த ராகினிக்கு சீருடை அணிந்த வேலையில் பணிபுரிய வேண்டுமென்ற கனவுப் பயணம் ஒன்பது ஆண்டு
களுக்கு முன் தொடங்கியது. போதைப் புழக்கத்திற்கு அடிமையாகிய சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் மறுவாழ்வு அமர்வுகளை வழிநடத்துவது இவரின் தலையாய பொறுப்புகளில் ஒன்று.
கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னரே இந்தப் பதவியைப் பெற்ற ராகினிக்கு சவால்கள் அவ்வப்போது குறுக்கிடுவது இயல்பாக உள்ளது.
தனது கணவரும் சிறையில் முன்பு அதிகாரியாக பணிபுரிந்தவர் என்ற ராகினி, கணவரின் அயராத ஆதரவால் இந்த உன்னத பணியில் தன்னால் நிலைத்து நிற்க முடிவதாக பகிர்ந்துகொண்டார்.
sanush@sph.com.sg