தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிக்கக் கற்கும், கற்பிக்கும் அதிபதி இளையர்கள்

3 mins read
6b2d3606-abc0-4e5e-aed5-bf7095e3f90a
செப்டம்பர் 14, 15ஆம் தேதிகளில் ‘தி கிராஸ்ரூட்ஸ் கிளப்’பில் அரங்கேறவுள்ள ‘சித்தர் 42’ ஒத்திகையில் அதிபதி இளையர்கள் (இடமிருந்து) யாழினி (15), ஓவியா (19), ஹர்ஷிதா (15), தர்ஷன் (15). - படம்: ரவி சிங்காரம்

தமிழ் இளையர் விழாவின் இரண்டாவது நிகழ்ச்சியாக, அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம், உதயசூரியன் 2023 நாடகப் பயிலரங்கைப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி மாணவர்களுக்கும் வழங்கிவருகிறது.

கேலாங் பாருவில் அமைந்திருக்கும் ‘டான்ஸ்போர்ட் டி ஏலன்’ நிலையத்தில் அதிபதியின் கலை இயக்குநர் ஆர். புக­ழேந்தி ஐந்து நாள் பயிலரங்கை நாள்தோறும் காலை 9 முதல் 3 மணி வரை நடத்திவருகிறார். அது சிறப்பாக நடைபெற அதிபதியில் பல்லாண்டுகளாக நடித்துவரும் இளையர் துணைநிற்கின்றனர்.

தன் வாழ்க்கையிலேயே முதன்முறையாக நாடகப் பயிலரங்குக்கு வந்துள்ள மதுசூதனன், 17, எதிர்காலத்தில் பகுதிநேர நடிகராக விரும்புவதாகவும் இப்பயிலரங்கு அதற்கு மிகவும் உதவுவதாகவும் கூறினார்.

நடிப்புக்குப் புதியவரான 15 வயது பிரியங்கா, பயிலரங்கு மிகவும் சுவாரசியமாக இருப்பதாகவும் கூறினார்.

உடற்பயிற்சி மூலம் கைகால்களை நீட்டி மடக்குதல், கடினமான வசனங்களைப் பிழையில்லாமல் ஏற்ற இறக்கத்தோடு பேசுதல், கண்களால் மட்டுமே உணர்ச்சிகளை வெளிக்காட்டுதல் போன்ற பல்வகையான நாடக உத்திகளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர் அதிபதிக் குழுவினர்.

செப்டம்பர் 3 அதிபதி நாடகப் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள்.
செப்டம்பர் 3 அதிபதி நாடகப் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள். - படம்: ரவி சிங்காரம்

“அதிபதி நாடகப் பயிற்சிகளால் கூச்ச சுபாவத்தை விட்டுவிட்டுக் கம்பீரக் குரல்வளத்தை அவரால் முழுதாக வெளிக்காட்ட முடிகிறது. அவரது உடல் பாவனைகள், நடிப்பாற்றல், உற்சாகம் அனைத்தும் அதிகரித்துள்ளன. அதிபதி பயிற்சிகளுக்கு அவரே நாட்டம் கொண்டு தனியாக வருவார்,” என்றார் ஒன்பது வயது சாய் சத்ரேஷின் தந்தை சுரேஷ் பிரபு, 41.

செப்டம்பர் 6, 8, 9 அன்று பயிலரங்கு தொடர்ந்து நடக்கவிருப்பதால் ஆர்வமுள்ளோர் https://tinyurl.com/Uthayasuriyan இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

2013ல் தொடங்கிய அதிபதி நாடகக் குழுவில் இளையர் பலரும் உறுப்பினர்களாக இருந்துவருகின்றனர்.

திசைவேகம் 2023ல் மேடையேற்றவிருக்கும் மூன்று நாடகங்கள் - ‘சித்தர் 42’, ‘மின்னனுவன்’, ‘வாக்கு வித்தியாசம்’ ஆகியவற்றின்வழி இளையரின் நடிப்புத் திறன்களை மக்கள் காணலாம்.

செப்டம்பர் 14 பள்ளி மாணவர்களுக்கும், செப்டம்பர் 15 இரவு 8 மணிக்கு பொதுமக்களுக்கும் நாடகங்கள் ‘தி கிராஸ்ரூட்ஸ் கிளப்’பில் மேடையேறவுள்ளன.

‘சித்தர் 42’ நாடகத்தை இயக்கி, அதில் எந்திரனாக நடிக்கவிருக்கும் ஓவியா சம்பத், 19, தற்போது நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். எனினும், நாடகத்தின்மீதுள்ள மோகத்தினால் நடிப்பைத் தொடர்கிறார்.

இவரும் இவரது தங்கை பூஜாவும் 2016லிருந்து அதிபதி நாடகக் குழுவினராகச் சேர்ந்து தங்கள் ஆற்றல்களை மேம்படுத்திவந்துள்ளனர்.

“அதிபதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக நிறைய கற்றுவந்துள்ளோம். தமிழ் நாடகம் மிகப் பரவசமானது,” என்கின்றனர் இச்சகோதரிகள்.

பூஜா இதுவரை இரு நாடகங்கள் எழுதியுள்ளார். ஒன்று, 2021ல் யூடியூப்பில் வெளிவந்த ‘சுடுகாட்டில் டிக்டாக்’. மற்றொன்று, திசைவேகத்தில் மேடையேறவுள்ள ‘வாக்கு வித்தியாசம்’. மேலும், தன் நாடகப் பாதையில் அடுத்த கட்டமாக ‘மின்னனுவன்’ நாடகத்தை இயக்கியும் உள்ளார்.

2018ல் அதிபதியில் சேர்ந்த நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் நாகராஜன் கவுதம் கார்த்திக், 17, “முதலில் சேர்ந்தபோது சற்றுப் புதிய சூழலாக இருந்தாலும் எனக்கு ஆர்வம் மிகுந்துகொண்டே இருந்தது.

“அதிபதி மூலம் புதிய மாணவர்ளுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. இயக்குவது, கதை எழுதுவது, நடிப்பது, அனைத்திலும் எங்கள் திறன்களை மேம்படுத்த முடிகிறது. அதனால் எனக்குள் சொந்தமாகவே படம் எடுக்க ஆசை வளர்ந்துள்ளது. என் தொழிலையும் இதைச் சார்ந்து அமைத்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார்.

கதையோட்டம் எழுதுவது பற்றிய கூறுகளைக் கற்றுக்கொண்ட இவர், கொவிட்-19 காலத்தில் ‘வாங்க நடிக்கலாம்’,’ நடிக்க வந்துட்டாங்க’ என்ற இரு நாடகங்களுக்குக் கதை எழுதியுள்ளார்; அதிபதி அதனை ‘கிரீன் ஸ்கிரீன்’ பின்னணியில் இணையத்தில் வெளியிட்டது.

அண்மையில் அதிபதியின் ஒரு நாடகத்தில் மனிதனின் மனதில் ஏற்படும் பயத்தைக் கதாபாத்திரமாக ஏற்று நடித்துள்ளார்.

கொவிட்-19 நாள்களில் சூழலுக்கேற்ப மாறி, காணொளித் தொகுப்பாக்கம் முறைகளையும் இளையர் கற்றுக்கொண்டும் உள்ளனர்.

செப்டம்பர் 14, 15ஆம் தேதிகளில் ‘தி கிராஸ்ரூட்ஸ் கிளப்’பில் அரங்கேறவுள்ள ‘சித்தர் 42’ ஒத்திகையில் மும்முரமாக ஈடுபட்டுவரும் இளையர்கள்.
செப்டம்பர் 14, 15ஆம் தேதிகளில் ‘தி கிராஸ்ரூட்ஸ் கிளப்’பில் அரங்கேறவுள்ள ‘சித்தர் 42’ ஒத்திகையில் மும்முரமாக ஈடுபட்டுவரும் இளையர்கள். - படம்: ரவி சிங்காரம்

வருங்காலத்தில் நடக்கும் சம்பவங்களைக் கற்பனையிடும் ‘சித்தர் 42’, செயற்கை நுண்ணறிவை ஆராயும் ‘மின்னனுவன்’, நேர்மையையும் லட்சியத்தையும் சீர்தூக்கும் ‘வாக்கு வித்தியாசம்’ - இம்மூன்று நாடகங்களும் மக்களுக்கு வித்தியாசமான கண்ணோட்டங்களைக் கொடுக்கும்.

எங்கள் ஐந்து மாதக் கடும் பயிற்சியின் பலனை நேரில் காணப் பொதுமக்களை ஆவலுடன் அழைக்கிறோம்,” என்கின்றனர் அதிபதி நாடக் குழுவின் இளையர்கள்.

அதிபதி இணையத்தளம் (https://www.athipathi.com/) வழி நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்