தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்தைக் காப்போம், பொதுநோக்கை வளர்ப்போம்

2 mins read
3e49a593-ae9f-46a8-a65c-25f16c5e8c37
பல்வேறு அம்சங்களில் சிங்கப்பூர்ச் சமுதாயத்தை முன்னேற்றும் திட்டமான ‘ஃபார்வர்ட் எஸ்ஜி’ - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் 60ஆம் நிறைவு ஆண்டைக் கொண்டாட்டத்துடன் (எஸ்ஜி60ஐ) புத்தாண்டு பிறந்துள்ளது.

லீ குவான் இயூ பிரதமாக இருந்தபோது இந்நாட்டில் பிறந்த நான், நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் கடந்த ஆண்டு பதவியேற்ற நிகழ்வை, செய்தியாளராக பதிவு செய்தது மறக்க முடியாதது.

திரு வோங், 2023 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்த முன்னேறும் சிங்கப்பூர் திட்டம் இந்த ஆண்டில் எவ்வாறு செயல்படும் என்பதைக் காண ஆவலுடன் உள்ளேன்.

இந்தத் திட்டத்துடனும் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்குச் சாதகமாக, பிப்ரவரி 18ஆம் தேதி அறிவிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவினத்திற்குக் கைகொடுப்பதற்கான உதவிகள் கூடுதலாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் நிலவும் பதற்ற நிலையையும் சமுதாயப் பிளவுகளையும் பிரதமர் வோங், தமது புத்தாண்டுச் செய்தியில் சுட்டியுள்ளார். உலக நெருக்கடிகளும் எண்ணப்போக்குகளும் சிங்கப்பூரை பாதிக்காமல் இருக்காது என திரு வோங் கூறினாலும் கவலைக்குள்ளான உலகில் இந்நாடு, தொடர்ந்து பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கு உறைவிடமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆண்டின் முதல் நாளிலேயே அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரிலும் தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள மோண்டிநிக்ரோவிலும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல்களும் நடைபெற்றது வருத்தத்தை ஏற்படுத்தின.

டிக்டாக் அமெரிக்காவில் ஜனவரி 19ஆம் தேதி அதிகாரபூர்வமாக தடைசெய்யப்படக்கூடும். உலகில் மறைமுகத்தன்மையும் நம்பிக்கையின்மையும் அதிகரித்துவருவதற்கு உதாரணமாக இது உள்ளது.

ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்க உள்ள டோனல்ட் டிரம்ப், உலகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதைக் காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதல் பதவிக்கால தவணையின்போது வர்த்தக தன்னைப்பேணித்தனத்தைக் கடைப்பிடித்த திரு டிரம்ப், அமெரிக்காவில் வேலைகளைக் காப்பாற்றுவதற்கான மீண்டும் அத்தகைய அணுகுமுறையை கையாளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக விரிசல்கள் அதிகமாகக்கூடும்

உலகப் பொருளியலின் நிச்சியமின்மை, உள்நாட்டு வேலையிழப்புகளை ஏற்படுத்துகின்றன. லசாடா, டைசன், கெரோசெல், சாம்சுங் எனப் பல்வேறு நிறுவனங்களில் வேலையிழப்புகள் சாதாரணமாக ஆகிவிட்டது.

என்றாலும் பல புதிய வாய்ப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன. அரசாங்கம் தன்னால் இயன்ற உதவிகளை நல்கும் என்றாலும் மக்களின் பங்கு மிகவும் அவசியம்.

மகிழ்ச்சியான குடும்பங்களுக்கும் சமுதாயத்திற்கும் அடிநாதமாக இருப்பவர்கள் வேலை செய்து முன்னேற்றம் காண்பவர்கள்.

செய்தியாளர் என்ற முறையில், உதவி தேவைப்படுவோர் பலரைப் பற்றிய செய்திக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அரசாங்கம்தான் உதவுகிறதே என நினைத்து பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்பது என் கருத்து.

பிறரைத் தூக்கி நிறுத்தி அதில் உயர்வு காணும் சமூகமாக நமது ஒட்டுமொத்த சமூகமும் உருமாறினால் உலகத்திலிருந்து எத்தனை அலைகள் வீசினாலும் மீண்டெழும் தன்மையை நம்மால் கட்டிக்காக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்