400 இளையர்கள் ஒன்றுகூடிய ‘நம்ம வீட்டுப் பொங்கல் 3.0’

400 இளையர்கள் ஒன்றுகூடிய ‘நம்ம வீட்டுப் பொங்கல் 3.0’

2 mins read
0351547c-1479-4841-9959-7501f68771ed
தேசியப் பல்கலைக்கழகத்தின் இந்நாள், முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி பல்வேறு பல்கலைக்கழகங்களையும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். - படம்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை நடத்திய ‘நம்ம வீட்டுப் பொங்கல் 3.0’ விழா இதுவரை இல்லாத அளவிற்கு பெருவரவேற்பைப் பெற்றது.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மத்திய நூலகத்தின் வெளிப்புறத்தில் ஜனவரி 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இவ்விழாவில், ஏறத்தாழ 400 தமிழ் இளையர்கள் ஒன்றுகூடி பொங்கல் திருநாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கவும், கொண்டாடவும், இணைந்து செயல்படவும் ஒரு மேடையாகச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை உருவெடுக்கும் நோக்கோடு இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏறக்குறைய 260 நுழைவுச்சீட்டுகள் விற்பனையான நிலையில், இவ்வாண்டு 400க்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகின.

எழுவர் அடங்கிய ஒரு சிறிய குழுவாக இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தாலும், ஒவ்வொருவரும் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, சீராகத் திட்டமிட்டுச் செயல்பட்டதாகத் தெரிவித்தார் தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் ஸ்ருத்தி ராஜேஷ்.

உறியடிக்க முயலும் இளையர்.
உறியடிக்க முயலும் இளையர். - படம்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

உறியடித்தல், அஞ்சாங்கல், மருதாணி இடுதல், பானையில் ஓவியம் தீட்டுதல் போன்ற பாரம்பரிய நடவடிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பந்துவீச்சு, வளையல் வீச்சு எனப் புதிய விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

கயிறு இழுத்தல் போன்ற குழு விளையாட்டுகள் பார்வையாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தின.

கயிறு இழுக்கும் போட்டியில் குழுக்களாகக் கலந்துகொண்ட இளையர்கள்.
கயிறு இழுக்கும் போட்டியில் குழுக்களாகக் கலந்துகொண்ட இளையர்கள். - படம்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த வீரவேல் உறுமி மேளக் குழு.
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த வீரவேல் உறுமி மேளக் குழு. - படம்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

உறுமி மேளத்தோடு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கின.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் மாணவர்களும் இவ்விழாவில் நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.

இவ்வாறு மற்றப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் இவ்விழாவில் நிகழ்ச்சிகளைப் படைத்தது இதுவே முதன்முறை.

விழாவில் நடனமாடிய சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழக மாணவர்கள்.
விழாவில் நடனமாடிய சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழக மாணவர்கள். - படம்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

“எங்கள் நடனத்தின்போது பார்வையாளர்களிடத்தில் எழுந்த ஆரவாரம் மிகுந்த ஊக்கம் அளித்தது. இப்படிப்பட்ட கூட்டத்தின் முன்னிலையில் நடனமாடியது நல்ல அனுபவமாக அமைந்தது,” என்றார் ‘தமிழா’ அமைப்பின் சார்பில் நடனமாடிய புவிஷா ஆனந்த், 20.

விழாவின் இறுதியில் அனைவரும் ஒன்றாக நடனமாடி மகிழ, ‘நம்ம வீட்டுப் பொங்கல் 3.0’ விழா நிறைவுபெற்றது.

“இளையர்களாக அனைவரும் இணைந்து நடனமாடியது சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் காட்சியாக இருந்தது,” என்றார் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சேக் தாவுட், 23.

தமிழ்ப் பேரவையின் 47வது நிர்வாகக் குழு ஏற்பாடுசெய்த முதல் முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.

“இந்த ஆண்டிற்கான திசையை வகுக்கும் வாய்ப்பாக இவ்விழாவைப் பார்க்கிறோம்,” என்றார் தமிழ்ப் பேரவையின் தலைவர் எம். மோகனன்.

தமது குழு எண்ணிக்கையில் மட்டுமன்றி மனப்பாங்கிலும் உயர்ந்தது என்று பதிவிடும் வகையில் இவ்விழா அதிக அளவில் பங்கேற்பை ஈர்த்து, வலுவான சமூக உணர்வை நிலைநாட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்