திடீரென ஒருநாள் காது கேளாமல் போனது, பெற்றோர்களுக்கு இடையே எழுந்த பிரச்சினைகள், வாக்கு வாதங்கள், பெற்றோரின் விவாகரத்து, அதனால் ஏற்பட்ட மனவருத்தம், சிக்கல்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டபோதும் கல்வியில் கவனத்தைச் சிதறவிடாமல் தொடர்ந்து முன்னேறி பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ஜனனி விஸ்வநாதன், 16. தொடக்கநிலை ஐந்தில் படித்துக் கொண்டிருந்தபோது கேட்கும் திறனை இழந்தார் ஜனனி.
மருத்துவர் ஆலோசனைப்படி, செவித்திறன் சாதனத்தைக் காதில் அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்ற அவர், சக மாணவர்களின் கேள்விக் கணைகளுக்கு ஆளாகி னார். தேவையற்ற கவனம் அவர் மீது விழுந்ததால் மனத் தாழ்வு கொண்டு அவரின் தன்னம்பிக்கையும் இழக்கத் தொடங்கினார் அவர். நண்பர்கள், ஆசிரியர்கள் தம் மீது அனுதாபம் காட்டி வித்தியாச மாக நடத்துவார்களோ என அஞ்சி அவர்களுடன் சகஜமாகப் பழகத் தயங்கினார் ஜனனி. தொடக்கத்தில் செவித்திறன் சாதனத்தை அணிவதற்குக் கூச்சப்பட்ட ஜனனி, அவரது தாயார் காட்டிய ஊக்குவிப்பால் அந்தச் சாதனத்தை அணிந்ததுடன் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தொடக்கநிலை இறுதித் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற்று வழக்கநிலைக் கல்விக்காக சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். ஜனனி செவித் திறன் சாதனத்தை அணிந்து பள்ளிக்குச் சென்றபோது அங்கும் அதே இடையூறுகளைச் சந்தித்தார் அவர்.
மனச்சோர்வுக்கு ஆளான இவர் உயர்நிலை ஒன்றாம் நிலையில், தன் செவித்திறன் சாதனத்தை மறைக்க எண்ணிக் கூந்தலை குட்டையாக வெட்டிக்கொண்டார். அவரது பிரச்சினையை அறிந்து கொண்டு கூந்தலைக் கட்டாமல் வர அனுமதித்தது பள்ளி நிர்வாகம். மன உறுதியை வளர்த்துக் கொண்ட ஜனனி, மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேரத் திட்டமிட்டார்.

