இளம் பிள்ளைகளுக்கும் அவர்களது தாத்தா பாட்டிகளுக்கும் இடையேயான பிணைப்பை ஏற்படுத்த உதவும் செயலியைத் தமது அணியினருடன் இணைந்து வடிவமைத்துள்ளார் மாணவர் ஷிவணேஷ் விஜய், 13.
‘சேலஞ்ச் வொய்’ (Challenge Y) எனும் மாணவர்களுக்கான வடிவமைப்புப் போட்டியின் பகுதியாக இச்செயலியை வடிவமைத்துள்ளனர் அந்த மாணவ அணியினர்.
ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குதல் எனும் கருப்பொருளில் அமைந்த இப்போட்டிக்காக, செயிண்ட் ஜோசப்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் இணைந்து வடிவமைத்த இச்செயலி இறுதிப் போட்டிக்கும் தேர்வானது.
“தொழில்நுட்ப உதவியுடன் தலைமுறைகளுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்தி, கதைகளை, அனுபவங்களைப் பகிர வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே ‘குடும்பத் தொடர்’ (Family Link) எனும் இச்செயலியின் நோக்கம்,” என்றார் மாணவர் ஷிவணேஷ்.
உயர்நிலை இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் ஐவர் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர். மூன்று மாணவர்கள் நிரலாக்கப் பணியிலும், இருவர் திரை வடிவமைப்புகளிலும் பணியாற்றியுள்ளனர்.
தங்கள் அணியினர் ஒருவரது தாத்தா பாட்டி கொரியாவில் வசிப்பதால் அவர்களுடன் நேரம் செலவிட இயலாத நிலையில் உள்ளதாகவும் அவரது சிந்தனையைத் தொடர்ந்து இந்தச் செயலி உருவாக்கத்தில் ஈடுபட்டதாகவும் சொன்னார் ஷிவணேஷ்.
இந்தச் செயலி, தாத்தா பாட்டிகளுடன் இணைந்து செயல்பாடுகளில் ஈடுபடுவது, அவற்றை முடிக்கும்போது அதற்கு ஏற்ற புள்ளிகள் பெறுவது எனச் சுவாரசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“குறிப்பிட்ட வயதைக் கடந்தபின் மூத்தோரும் தனிமையை உணர்வர். இளையர்களுக்கும் அவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதிகரித்து வரும் இந்த இடைவெளியைக் குறைக்க வாய்ப்புகளை ஏற்படுத்துவது அவசியம் என நினைத்தேன்,” என்றார் ஷிவணேஷ்.
தொடர்புடைய செய்திகள்
இளையர்களுக்கேற்ற வகையில் எளிதான, மத்திய, கடினமான என மூன்று வகை செயல்பாடுகளுடன், பெரியவர்கள் பயன்படுத்த ஏதுவாக எளிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் அவர்.
மேலும், பெரியவர்களுக்காக அவரவர் மொழியில் பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.
இந்த ‘சேலஞ்ச் வொய்’ போட்டிக்காகக் குழுவாக இணைந்து செயலாற்றியது சிறப்பான அனுபவம் என்ற அவர், ஒவ்வொருவரின் தனித்துவமான சிந்தனையையும் ஒன்றிணைக்கும்போது சிறந்த தயாரிப்பு வெளிவரும் என்பதை இது உணர்த்தியதாகச் சொன்னார் அவர்.
நேர நிர்வாகம், நிரலாக்கம், குழு மனப்பான்மை என அனைத்தையும் கற்க வாய்ப்பளித்ததாகவும் சொன்னார் ஷிவணேஷ்.
“இளம் பிள்ளைகளுக்குத் தன்னார்வத்துடன் தாத்தா பாட்டிகளைச் சந்திக்க இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்று நம்பிக்கையுடன் சொன்னார் ஷிவணேஷ்.
‘சேலஞ்ச் வொய்’ போட்டி
வடிவமைப்புக் கல்வி மாநாடு 2025 இன் ஓர் அங்கமாகச் சிங்கப்பூர் வடிவமைப்பு மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த ‘சேலஞ்ச் வொய்’ தேசிய இளையர் வடிவமைப்புச் சவாலில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய நிலை வரையுள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதி நாளில் ஏறத்தாழ 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து செய்த 20 வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் பலகை விளையாட்டுகள் முதல் தொழில்நுட்பத் தீர்வுகள் வரை பல்வேறு வகையிலான வடிவமைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

