ஒரு வாழ்விடத்தின் கூறுகளை ஆழமான, பல்வகை அனுபவங்களுடன் கூடிய ஒரு கலைப்படைப்பாக வடிவமைத்துள்ளார் இளம் கலைஞரான கீர்த்தி உபாத்யாயா, 31.
சிங்கப்பூர்க் கலை வாரத்தில் ‘சிட்டி ஆஃப் ருயின்ஸ்’ எனும் கலைக் கண்காட்சியைத் தமது குழுவினருடன் இணைந்து வடிவமைத்த அவர், அப்படைப்பு குறித்தும் தமது கலை ஆர்வம், எதிர்காலத் திட்டம் ஆகியன குறித்தும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
முழுநேர அரும்பொருளக காப்பாளராகப் (Museum Curator) பணியாற்றும் கீர்த்தி, சிறு வயதிலிருந்தே கலைகளில் ஆர்வம் கொண்டவர்.
“பள்ளிக்காலத்தில் படம் வரையக் கற்றதில் தொடங்கி, என் வாழ்வில் கலையுடனான தொடர்பு எப்போதும் இருந்திருக்கிறது,” என்று கூறும் கீர்த்தி, படிப்பை முடித்த கையுடன் சிங்கப்பூர்க் கலைப்பள்ளியில் (சோட்டா) இணைந்தார்.
“முழுநேரமாகக் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்துப் பயிலும் சிந்தனையில் இருந்தபோதுதான் சோட்டா தொடங்கியது. அங்கு இணைந்ததைச் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவாகக் கருதுகிறேன்,” என்றார் கீர்த்தி.
“2008 முதல் 2012ஆம் ஆண்டு வரை சோட்டாவில் பயின்றபோது, நேரடியாகப் படம் வரைதல் போன்ற பணிகளைத் தாண்டி, கலைத்துறையில் பல வாய்ப்புகள் உள்ளதையும் நுணுக்கங்கள் உள்ளதையும் அறிந்துகொண்டேன்,” என்றார்.
கலையைத் தாண்டி, கலாசாரம், கலைஞர்களின் வாழ்வியலில் எவ்வகைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற தலைப்புகளில் ஆர்வம் இருந்ததாகவும் அதன் தொடர்பில் மேற்படிப்பு பயில ஆர்வம் கொண்டதாகவும் சொன்னார் கீர்த்தி.
தொடர்ந்து லண்டன் சென்று ‘கலை வரலாற்றுத்’ துறையில் பயின்ற அவர், சிங்கப்பூரில் கலைத்துறை தொடர்பில் பணியாற்றத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அதன்பின்னர் ஒரு லாபநோக்கற்ற நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தொடர்ந்து திரைக்குப் பின்னால் செயல்படும் பல பணிகளிலும் ஈடுபடத் தொடங்கினார்.
“கலைப்படைப்புகளில் நேரடியாக முழுநேரமாகப் பணியாற்றாவிட்டாலும், அவ்வபோது இவ்வகை விழாக்களில் சக கலைஞர்களுடன் இணைந்து பங்காற்றுவதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் கீர்த்தி.
“கலையை முழுநேரமாக எடுத்துப் படிப்பதற்கும் பணியாற்றுவதற்கும் இன்னும் தயக்கம் நிலவுகிறது. அதனை ஒட்டிய பல விரிவான துறைகளில் வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆர்வம் நிலைத்து நிற்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தால் இத்துறைக்குள் நுழையலாம்,” என்று இளையர்களுக்கு அறிவுறுத்தினார் கீர்த்தி.
‘சிட்டி ஆஃப் ருயின்ஸ்’ கலைப்படைப்பு
“சிங்கப்பூர்க் கலை வாரத்துக்காகப் பணியாற்ற, இந்தச் சிந்தனையுடன் என் தோழி நடாலி கூ அழைத்தபோது உற்சாகமாக ஒப்புக்கொண்டேன்,” என்ற கீர்த்தி, “நாம் வாழுமிடம் எப்படி இருக்குமென்கிற சிந்தனை அனைவருக்கும் உள்ளதுதான். அது பார்வையாளர்களும் உணரும் வண்ணம் அமையும் என நினைத்தேன்,” என்றார்.
மலேசியாவின் ஜோகூர் நகரில் அமைந்துள்ள ‘ஃபாரஸ்ட் சிட்டி’ குடியிருப்பு வட்டாரத்தை மனத்தில் வைத்து, பசுமையான, மக்கள் கூடும் வாழ்விடத்தை அக்கலைப்படைப்பு பிரதிபலிப்பதாகக் கீர்த்தி கூறினார்.
மணல், கான்கிரீட் துண்டுகள், சிறு சிறு திரைகளில் தோன்றும் வட்டாரத்தின் புகைப்படங்கள் ஆகிய அம்சங்களை அப்படைப்புகள் உள்ளடக்கியதாக அவர் சொன்னார்.
தொடர்ந்து, இரவு, பகல் எனக் காலங்களையும், மக்கள், நடமாட்டம் ஆகியவற்றையும் அது பிரதிபலிக்கும் என்றார் அவர்.
மக்கள் வாழும் இடங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் எனும் கேள்வியுடன், அதற்காக விடை தேடும் ஆர்வத்துடன் செல்ல வேண்டும் எனும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டதாகக் கீர்த்தி தெரிவித்தார்.

