இசைத்துறையில் ஆற்றல்மிகு செயற்கை நுண்ணறிவு

4 mins read
21a1c838-d527-491b-ad06-2164b18247e2
படம்: - பிக்சாபே

நெ. ரெமிலா

செயற்கை நுண்ணறிவு பல துறைகளின் முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக இருந்து வருகிறது. தற்போது அதன் தாக்கம் இசைத் துறையிலும் உணரப்படுகிறது.

எத்தகைய இசை வேண்டும் எனச் செயற்கை நுண்ணறிவுக் கருவியினுள் உள்ளீடு செய்தால் அதிக முயற்சியின்றி ஓர் இசைப் படைப்பே உருவாக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு முன்பே இசையில் தொழில்நுட்பத்தின் ஈடுபாடு அறிமுகம் கண்டுள்ளது.

1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘இலியாக் சுவீட்’ (Illiac Suite) எனும் பாடல், முழுமையாக ஒரு கணினியால் இயற்றப்பட்ட இசைப் படைப்பு. இதுவே தற்போதைய பிரமிக்கத்தக்க நிலையின் வித்தாக அமைந்தது.

இசையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

பொதுவாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது ‘எல்எல்எம்’ எனப்படும் பெருமொழி மாதிரி வரைவைக் (Large Language Models - LLM) கொண்டு செயல்படுவதாகும்.

பெருமொழி மாதிரி வரைவு என்பது அதிகளவிலான தரவுகளின் மூலம் பயிற்சிபெறும் அடிப்படை மாதிரி வரைவுகளுள் ஒன்றாகும்.

இசை தொடர்பாகச் செயல்படும்போது இந்தப் பெருமொழி மாதிரி வரைவுகளினுள் இசைக்கருவிகள், குரல்பதிவுகள் முதலியவற்றின் தரவுகளைச் சேர்க்கவேண்டும்.

பின், துல்லியமான குறிப்புதவிச் சொல்லைப் (Prompt) பயன்படுத்தும்போது பயனர்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவுசெய்யும் பாடல் ஒன்று உருவாகும். அதிகமான தரவுகள் இருந்தால், உருவாக்கப்படும் இசையின் துல்லியமும் கூடும்.

துல்லியம்

மனிதர்களுக்கு ஈடாகத் துல்லியத்துடன் இசை படைக்கும் ஆற்றலைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளதா என்ற கேள்வியும் எழலாம்.

மனிதர்கள் படைக்கும் உணர்வுபூர்வமான இசையையும் அதன் தனித்தன்மையையும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் இசையால் வெளிக்கொணரும் ஆற்றல் இருப்பதாக ‘ஹார்வர்ட்’ பல்கலைக்கழகத்தில் மூளை நரம்பியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளராக இருக்கும் முனைவர் ம கணேஷ்குமார் தெரிவித்தார்.

ம கணேஷ்­கு­மா­ர்.
ம கணேஷ்­கு­மா­ர். - படம்: ஏஐ சிங்­கப்­பூர்

“செயற்கை நுண்ணறிவின் உதவியால் இசைத் துறை புதிய அம்சங்களைத் தன்வசம் சேர்த்துக்கொண்டு தன் தன்மைகளைத் தொடர்ந்து மாற்றக்கூடியது,” என்றார்.

கலைஞர்களின் எதிர்காலம்

இசை உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதர்களையே விஞ்சிவிட்டால், இசைத் துறையை நம்பியிருப்பவர்களது நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து தமது கருத்துகளைக் கூறிய தொழில்நுட்பத் தொழில்முனைவர் நித்திஷ் செந்தூர், “இசைக்கலைஞர்கள் செயற்கை நுண்ணறிவைத் தங்களது வாழ்வாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கருவியாகப் பார்க்கவேண்டியதில்லை,” என்றார்.

தொழில்நுட்பத் தொழில்முனைவர் நித்திஷ் செந்தூர் செயற்கை நுண்ணறிவு இசைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
தொழில்நுட்பத் தொழில்முனைவர் நித்திஷ் செந்தூர் செயற்கை நுண்ணறிவு இசைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். - படம்: நித்திஷ் செந்தூர்

மாறாக, செயற்கை நுண்ணறிவு, இசைக்கலைஞர்களுக்குக் கைகொடுக்கக்கூடும் என்று திரு நித்திஷ் கூறினார்.

இவ்வாண்டு ஜூன் மாதத்தின்போது அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் டாலஸ் நகரில் நடைபெற்ற இணைய மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை படைத்த நித்திஷ், ‘சுனோ’ என்ற தளத்தின் மூலம் தாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு இசை குறித்தும் பேசினார்.

“ஒரு பாடலைக் கேட்கும்பொழுது, அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பாடல் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு நுட்பமாக சில நேரங்களில் செயற்கை நுண்ணறிவு செயல்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் எவ்விதமான இசையையும் ரசிப்பதற்குத் தயாராக உள்ளனர் என்றும் இசைத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு கலைஞர்களுக்கு உதவியாகவே திகழும் என்றும் அவர் கூறினார்.

நேரடி இசைக்கருவிகளின் பயன்பாடு தொழில்நுட்பத்தின் காரணமாகக் குறைந்துகொண்டிருப்பதன் அடுத்தகட்டம்தான் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என அவர் கருதுகிறார்

செயற்கை நுண்ணறிவு இறுதியில் படைப்பாக்கத்தை எளிதாக்கிவிடும். “எனவே, இசைக்கலைஞர்கள் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதை ஆராயவேண்டும்,” என்று அவர் கூறினார்.

பாரம்பரிய இசையும் செயற்கை நுண்ணறிவும்

செயற்கை நுண்ணறிவின் மூலம் தமிழ்ப் பாடல்களை உருவாக்குவதன் சவால்களையும் கட்டுப்பாடுகளையும் நித்திஷ் விவரித்தார்.

“தமிழ்ப் பாரம்பரிய இசைக்கருவிகளான பறை, உறுமி, தவில் முதலியவை குறித்த தரவுகள் அதிகமாக இன்னும் பெருமொழி மாதிரி வரைவில் சேர்க்கப்படவில்லை.

“அதனால், நாட்டுப்புற, கிராமிய, தெம்மாங்குப் பாடல்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்குவது சிரமம். ஆனால், கர்நாடக இசைக்கருவிகளின் இசைத் தரவுகள் ஓரளவிற்குச் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடக, மெல்லிசைப் பாடல்களை உருவாக்குவதில் பெரிய சிரமம் இல்லை,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், பிற்காலத்தில் தமிழ் இசைக்கருவிகளுகளின் இசைத் தரவுகள் அதிகளவில் சேர்க்கப்படுகையில் மண்மணம் மாறாத் தமிழ்ப் பாடல்களைச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்க இயலும் என அவர் நம்புகிறார்.

கலைஞன் வேறு, தொழில்நுட்பம் வேறு

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகுந்த முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அது சாதிப்பதற்கு இன்னும் பல உள்ளதாக சிங்கப்பூர் புல்லாங்குழல் இசைக்கலைஞரான நிரஞ்சன் பாண்டியன் கூறினார்.

குறிப்பிட்ட குறிக்கோள்களையும் உள்ளீடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் படைப்புகள், கலையின் முழுமைநிலையை எட்டாது என்றார் அவர்.

“ஒரு கலைஞர் படைப்பதற்கான அல்லது ஒரு படைப்பை இயற்றுவதற்கான நோக்கமே இன்னொரு மனிதருடன் இசையோடு ஓர் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்வதற்காகத்தான். செயற்கை நுண்ணறிவால் அவ்வாறான உணர்வை அளிக்க முடியாது,” என்ற தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் நிரஞ்சன்.

உள்ளூர் இசையில் செயற்கை நுண்ணறிவு

‘மெரூன் கலர் கட்டடம்’ என்ற சிங்கப்பூர் குறும்படத்தை இயக்கியுள்ள உமா சங்கர், தனது படத்திற்கு இசையமைப்பதற்கும் பாடல்களைப் பாடுவதற்கும் ‘சுனோ’ கருவியைப் பயன்படுத்தியுள்ளார். அக்கருவியினுள் பாடல் வரிகளை உள்ளிட்டால் பலவகையான இசைப் பாடல்கள் உருவாக்கப்படுகின்றன.

ஓர் இசைப் படைப்பை உருவாக்குவதற்கான செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி, கலைஞர்கள் தங்களது படைப்பாற்றலை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு துணைபுரிகிறது என்று அவர் கூறியிருந்தார்.

வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பேரளவில் வளர்ச்சியடையும் என்பது உறுதி. இசைத்துறையில் அதன் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

அதனால், இசைக்கலைஞர்கள் செயற்கை நுண்ணறிவைக் கண்டு அஞ்சாமல், அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, புதுவகையான இசைப்படைப்புகளை உருவாக்க முயலவேண்டும்.

இவ்வாறு செயல்பட்டால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு இடையிலும் இசைக்கலைஞர்கள் தங்களது துறையில் நிலைத்திருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்