உலக குடிமக்களாக இளையர்களை வளர்க்கும் ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டம்

உலக குடிமக்களாக இளையர்களை வளர்க்கும் ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டம்

5 mins read
2024க்கான ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டத்துக்கு ஜூன் 10ஆம் தேதிக்குள் https://go.gov.sg/ayf2024 எனும் இணைப்பில் உடனே பதிவு செய்யுங்கள். 
58bb0c0e-5dc6-4935-af9a-d86c8d38e135
ஆசியான் நாடுகளில் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இளையர்களுடன் நேரடியாகக் கற்க ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டம் திரு யுவன் மோகனுக்கு (இடக்கோடி) வாய்ப்பளித்தது. - படம்: தேசிய இளையர் மன்றம்

சிங்கப்பூர் இளையர்களை அடுத்த தலைமுறை தலைவர்களாக வளர்த்தெடுக்கும் பணியில் பங்கு கொண்ட யுவன் மோகனுக்கு உந்துதலாக அமைந்தது, தேசிய இளையர் மன்றம் மற்றும் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் ஏற்பாட்டில் நடந்த ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டம் (ஏ.வை.எஃப்). 11 ஆசியான் நாடுகளிலிருந்தும் ஆர்வத்துடன் வந்திருந்த பிற பங்கேற்பாளர்களை சந்தித்து நட்புறவுகள் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு யுவனுக்கு கிட்டியிருந்தது. இவ்வனுபவம் தமது தலைமைத்துவ பயணத்தை புது திசையில் செலுத்தியுள்ளதாக உணர்ந்தார் யுவன்.

ஆசியான் நாடுகளிலிருந்து கலந்துகொண்ட 40 இளம் தலைவர்கள் சிங்கப்பூர், வியட்னாம் நாடுகளில் இத்திட்டத்துக்காக இணைந்தனர். 2018ஆம் ஆண்டில் தொடங்கி ஐந்தாவது முறையாக ஏற்பாடாகியுள்ள இத்திட்டம், கடந்த ஆண்டு 28 அக்டோபர் முதல் 4 நவம்பர் வரை இடம்பெற்றது.

இத்திட்டத்தில் கலந்துகொண்ட யுவன், இவ்வனுபவத்தின் வாயிலாக ஒரு தனித்துவமான பன்னாட்டு இளையர் சமூகத்தை கண்டுகொண்டதாக பகிர்ந்துகொண்டார். வெவ்வேறு நாடுகளின் நிலபரப்பு, அதற்கேற்ப அமைந்துள்ள கலாசாரங்கள், அரசாங்கத் திட்டங்கள், இளையர் பார்வைகள் ஆகியவை யுவனின் அனுபவத்தை செழுமையாக்கின. முற்றிலும் நகர்ப்புறமாக உருவெடுத்துள்ள சிங்கப்பூரிலிருந்து மாறுபட்டு, நகர-ஊரக பிரிவினையைக் கொண்ட வியட்னாம், தாய்லாந்து முதலிய ஆசியான் நாடுகள் எத்தகைய வளர்ச்சி குறிக்கோள்களை கருத்தில் கொள்கின்றன என்பதை அறிந்துகொண்டார் யுவன்.

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையம், நவீன பண்ணைகள் முதலிய இடங்களையும், வியட்னாமில் தேசிய புத்தாக்க மன்றத்தையும் (ஹனோய்) சென்று பார்வையிட்டனர் பங்கேற்பாளர்கள். இத்தகைய தலங்களை நேரில் கண்டு அரசாங்க, நிறுவன திட்டங்களைக் குறித்து அறிந்துகொண்ட யுவனால், ஆசியான் இளையர்களின் கண்ணோட்டங்களை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள முடிந்தது.

அண்டை நாடுகளாக இருந்தாலும், ஆசியான் நாடுகள் கலாசாரம், நவீனமயமாதல், நகரமயமாதல் ஆகிய அம்சங்களை ஒப்பிடும்போது மிக வேறுபட்டவையாகவே இருக்கின்றன. அந்நாட்டு மக்களின் சமூக சிக்கல்களும் மாறுபடுகின்றன. சிங்கப்பூரின் வசதி வாய்ப்புகளைக் கொண்டுள்ள இளையர்கள் இத்தகைய பிரச்சினைகள் குறித்து நேரடியாக, தனிப்பட்ட முறையில் கேட்டறியும்போது ஏற்படும் தாக்கம் தனித்துவமானது என குறிப்பிட்டார் யுவன்.

இது குறித்து கூறுகையில், “அதே சமயம், வியட்னாமும் சிங்கப்பூரும் எந்தெந்த வகைகளில் ஒற்றுமையாக உள்ளன என்பதையும் காண முடிந்தது. நவீன கட்டடங்கள், வசதிகள், வர்த்தகம், உலகமயமாகியும் இளையர்களுக்கேற்ற ரசனைகளிலும் அமைந்துள்ள உணவுபானத்துறை, முதலியவை நமது பொதுவான சில குறிக்கோள்களை நினைவூட்டின,” என்றார் யுவன். இதுபோன்ற விவரங்களை சுற்றுப்பயணியாகக் காண்பதைவிட, ஏ.வை.எஃப் பங்கேற்பாளறின் பார்வையில் கவனிப்பது புதுமையான ஓர் அனுபவம் என்றும் அவர் சொன்னார்.

கலந்தாலோசனைகள் ஒரு முக்கிய அங்கமாக திட்டத்தில் இடம்பெற்றன. அத்தகைய கலந்தாலோசனை ஒன்றில் பேசிய அப்போதைய துணைப் பிரதமர் திரு லாரன்ஸ் வோங், ஆசியான் நாட்டு இளையர்களிடையே வலுவான பிணைப்புகளுக்கான முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். அதற்கேற்ப, தனிப்பட்ட பிணைப்புகளை அமைத்துக்கொள்ள பல வாய்ப்புகள் பங்கேற்பாளர்களுக்கு இத்திட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்தன.

“சிறு குழுக்களாக கலந்துரையாடும்போது பிற நாட்டு பங்கேற்பாளர்கள் கேட்ட பல கேள்விகள் சுவாரசியமாக இருந்தன. குறிப்பாக, நீடித்த நிலைத்தன்மை எங்களிடையே அதிகம் பேசப்பட்டது. இயற்கை வளங்கள் குறைவாக உள்ள சிங்கப்பூரில் நம் இளையர்கள் இதுகுறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். அதிலிருந்து மாறுபட்ட, ஆர்வமூட்டும் யோசனைகள் பலவற்றை பிற நாட்டு நண்பர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன்,” என்றார் யுவன். தங்களின் அன்றாட வாழ்க்கையில் காணும் சிக்கல்களை தயக்கமின்றி அரசாங்க நிறுவனங்கள், அமைப்புகளிடம் தெரிவித்து அதற்காக தொடர்ந்து உழைக்கும் பிற நாட்டு இளையர்களின் செயலூக்கம் தம்மை கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

சமுதாய சிக்கல்களைக் களைவதில் முற்றிலும் புதியதொரு பரிமாணத்தை சமூக ஊடக தளங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், சமூக ஊடக கருவிகளையும் தளங்களையும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதில் வல்லவர்களான சிங்கப்பூர் இளையர்கள், அவற்றை கூடுதலாக சமூக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம் என உணர்ந்தார் யுவன். பிற அண்டைநாட்டு இளையர்கள் ஊடகத் தளங்களைக் கொண்டு தங்களுக்கென ஒரு குரலையும் சேவை அடையாளத்தையும் வகுத்துக்கொண்டுள்ளது நம் இளையர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையலாம் என்பதும் அவரின் கருத்து.

சிண்டா இளையர் மன்றத்தின் தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் யுவன். இளையர், சமூக சேவை சார்ந்த பல முயற்சிகளுக்கு தலைமைத்துவம் வகித்தும் ஈடுபட்டும் இருந்த அனுபவங்கள் யுவனின் பயணத்தில் பல. நமது இளையர்களுக்கு எவ்வாறு கூடுதலான உத்வேகத்தை அளிக்கலாம், எவ்வாறு சிங்கப்பூரைத் தாண்டிய நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ள உதவலாம் முதலிய எண்ணங்களை இத்திட்டம் தூண்டியுள்ளன என தெரிவித்தார் யுவன்.

சிங்கப்பூர் இளையர்கள் உலக குடிமக்களாக உருமாறுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

வேலை, தொழில் வாய்ய்பு, கல்வி, சேவை என பல அங்கங்களில் இளையர்கள் ஆசியான் நாடுகளிலிருந்து பயனடையும் வாய்ப்பு கொண்டுள்ளனர். விரிவான பார்வைகளே சிங்கப்பூரைத் தாண்டிய வாய்ப்புகளைக் கைவசப்படுத்த இளையருக்கு உறுதுணையாக இருக்கும் என்பது யுவனின் நம்பிக்கை.

அத்தகைய வட்டார இணைப்புகளை வழங்கி, நல்ல மனப்பான்மைகளை ஏ.வை.எஃப் விதைக்க வல்லது.

ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டத்தின் புதுமை

ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டம் 2023 தொடக்க நிகழ்ச்சி சிங்கப்பூரில் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியது. வர்த்தக, தொழில் அமைச்சு, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சுகளின் துணை அமைச்சர் ஆல்வின் டான், சிங்கப்பூருக்கான வியட்னாம் தூதர் மை ஃபுவோக் டுங், சிங்கப்பூருக்கான லாவோஸ் தூதர் செங்கியோ பவோங்படித், சிங்கப்பூருக்கான கம்போடியத் தூதர் சொக் கொயுன் ஆகியோருடன் ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டப் பங்கேற்பாளர்கள். 
ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டம் 2023 தொடக்க நிகழ்ச்சி சிங்கப்பூரில் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியது. வர்த்தக, தொழில் அமைச்சு, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சுகளின் துணை அமைச்சர் ஆல்வின் டான், சிங்கப்பூருக்கான வியட்னாம் தூதர் மை ஃபுவோக் டுங், சிங்கப்பூருக்கான லாவோஸ் தூதர் செங்கியோ பவோங்படித், சிங்கப்பூருக்கான கம்போடியத் தூதர் சொக் கொயுன் ஆகியோருடன் ஆசியான் இளையர் தலைமைத்துவத் திட்டப் பங்கேற்பாளர்கள்.  - படம்: சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம்

ஆசியான் நாட்டு இளையர்களை இணைப்பதோடு, அவரிகளின் புத்தாக்க கூட்டு முயற்சிகள் மலர்வதற்கான தளமாகவும் அமைந்துள்ளது ஏ.வை.எஃப். கடந்த ஆண்டு, ஏ.வை.எஃபின் முன்னாள் பங்கேற்பாளர் ஒருவரின் முயற்சியில் ‘சிங்கப்பூர்-வியட்னாம் இளையர் தலைவர் கூட்டமைவு’ உதித்தது. இரு நாடுகளுக்கிடையே இளையர்களை பிணைக்கும் நோக்கை இத்திட்டம் கொண்டிருந்தது. அதற்கேற்ப, கடந்தாண்டு முதன்முதலாக ‘வியட்னாம் இளம் தலைவர் பரிமாற்றத் திட்டம்’ ஏற்பாடானது.

மலேசிய இளையரான தர்மலிங்கம் பிள்ளை, ஏ.வை.எஃப் 2022ல் பங்குபெற்றிருந்தார். அவரின் ‘ஒன் ஆசியான்’ மின்னிலக்க திட்டம் ஆசியான் இளையர்களை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசாங்க அமைப்புகள், லாபநோக்கமற்ற அமைப்புகள், ஆகியவற்றோடு இணைத்து, அவர்களுக்குத் தேவையான உள்நாட்டு, வெளிநாட்டு தகவல்களை அளித்து வருகிறது.

வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் ஏ.வை.எஃப் கடந்த ஆண்டு 1,000 பங்கேற்பாளர் விண்ணப்பங்களைக் கண்டது. இது 2022ஆம் ஆண்டை காட்டிலும் 30 விழுக்காடு அதிகம். மேலும், 2018ஆம் ஆண்டில் 12 கூட்டு அமைப்புகளோடு இணைந்து இயங்கியது ஏ.வை.எஃப். அந்நிலை மாறி, தற்போது வரை 85க்கும் மேற்பட்ட உள்ளூர், ஆசியான வட்டார அமைப்புகள் ஏ.வை.எஃப்புடன் கைகோர்த்துள்ளன.

ஆசிய நாட்டு தலைவர்களோடு உரையாடும் வாய்ப்புகளை ஏ.வை.எஃப் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து அளித்துள்ளது. இவர்களில் பலர் முந்தைய ஏ.வை.எஃப் திட்ட கலந்தாலோசனைகளில் சிறப்பு பேச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

“இவ்வட்டாரத்தில் முக்கிய தலைமைத்துவத் திட்டமான ஏ.வை.எஃப் இளம் தலைவர்களிடையே எல்லை தாண்டிய கூட்டுறவுகளையும் வளர்ச்சி வாய்ப்புகளையும் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. உலகளவில் நிச்சயமின்மை அதிகரித்தபடி இருக்க, நமது இளையர்கள் வட்டார அளவில் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வது அவசியம். இதுவே நாம் ஒரு வட்டாரமாக வளர்ச்சியடையவும் முன்னேறவும் வழி வகுக்கும்,” என்றார் தேசிய இளையர் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சுவா.

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் துணை தலைவர் ஜீன் டான், பிளவுகள் நிறைந்த தற்போதைய உலகில் நம்பிக்கையே பிரிந்த கரைகளை இணைக்கவும் மனித பிணைப்புகளை வலுவாக்கவும் பாலமாக விளங்குவதாய் கூறினார்.

“ஏ.வை.எஃப் போன்ற திட்டங்கள் வேறுபட்ட தேசங்களிலிருந்து இளையர்களை ஒன்றுசேர்த்து அவரவர் பண்பாட்டை, அனுபவங்களை, சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்ள வகைசெய்கின்றன. வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையேயான புரிந்துணர்வையும் பன்னாட்டு உறவுகளையும் மேம்படுத்திக்கொள்வதனால் நமது பொதுவான சவால்களை இணைந்து தீர்ப்பது எளிமையாகும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்