சிரிப்பூட்டும் நகைச்சுவைக் காட்சிகள், சலிப்பு தட்டாத திரைக்கதை, புத்துணர்ச்சியூட்டும் ஆடல்களெனப் பல அம்சங்களைக் கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தது ‘தமிழா’ அமைப்பின் ‘அத்தியாயம்’ மேடை நாடகம்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட இவ்வமைப்பு, பிற கல்வி நிலைய மாணவர்களுடன் இணைந்து, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் முறையாக இம்மேடை நாடகத்தைக் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 24ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அரங்கேற்றியுள்ளது.
இம்மேடை நாடகத்தின் தயாரிப்பாளரான ஹர்ஷிதா பாலாஜி, “2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்கள் ‘தமிழா’ அமைப்பைத் தொடங்கியபோது அம்மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர ஒரு மேடையை உருவாக்கும் நோக்குடன் ‘அத்தியாயம்’ தொடங்கப்பட்டது,” எனக் கூறினார்.
“தற்போது இத்தயாரிப்பின் வழி பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாண்டிலிருந்து இத்தயாரிப்பு ஈராண்டுக்கு ஒரு முறை அரங்கேறும். இதன்வழி மேலும் பல திறனாளர்களைக் கண்டறிந்து அவர்களைக் கலைத்துறைக்கு அறிமுகப்படுத்த ‘தமிழா’ முற்படுகிறது,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு கணியியல், சட்டத் துறைகள் பயின்று வரும் 20 வயது ஹர்ஷிதா.
இவ்வாண்டின் நாடகம், 1980களில் நிகழும் ஒரு கதையாக அமைந்தது.
அக்காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதை, அதில் ஏற்படும் பிரச்சினைகள், விபரீதங்கள், எதிர்பாரா திருப்பங்கள், இறுதியில் காதல் கைகூடுகிறாதா என்ற கேள்வியை மையமாகக் கொண்டிருந்தது நாடகம்.
நாடகத்தின் நாயகனாக, மைக்கல் கதாபாத்திரத்தில், நடித்த வருண் செல்வராஜ், 20, “எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நடிகருக்கான தேர்வுக்கு வந்தேன். நாயகன் கதாபாத்திரம் கிடைத்தது எதிர்பார்க்காத ஒன்று. இது நிச்சயம் நல்லதொரு கற்றல் பயணமாக அமைந்தது,” என்றார்.
நாடகத்தின் மற்றொரு முக்கிய வேடமான கேப்டன் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்த 20 வயது யுவராஜ் மோகன், நகைச்சுவைக் காட்சிகளின் வழியாகவும் பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்தின் பாவனைகளின் வழியாகவும் மகிழ்வித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மின் பொறியியல் துறை மாணவரான அவர், “எனக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமிருக்கிறது. ஆகையால், நிச்சயமாகத் தொடர்ந்து இத்தகைய நாடகங்களில் நடிக்க முயல்வேன்,” என்று கூறினார்.
இந்நாடகத்தில் கவிதை, உவமை, கதை கூறல், ஆகிய பல்வேறு இலக்கிய உத்திகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதே சமயத்தில் மேடை அமைப்பு, ஒளி, ஒலி பயன்பாடு ஆகியவை தயாரிப்புக்கு மேலும் வலு சேர்த்தன.
நாடகத்தின் இயக்குனர்களில் ஒருவரான, முருகேசன் லோகேஷ், 21, “இந்த அனுபவம் உண்மையில் மேடுபள்ளம் நிறைந்த ஒன்றாக இருந்தது. இறுதியில் எங்கள் எழுத்தில் உருவான கதாபாத்திரங்கள் மேடையில் உயிர் பெறுவதைப் பார்த்தது வருணிக்க முடியா உணர்வை ஏற்படுத்தியது,” என்று கூறினார்.
தயாரிப்பில் மற்றொரு முக்கிய அம்சமாக நடனங்கள் அமைந்திருந்தன. நாடகத்தின் ஓட்டத்தைப் பாதிக்காமல் அவை அதற்குப் பக்கபலமாக நின்றன.
நடன அமைப்பாளர்களுள் ஒருவரான 19 வயது வர்ஷா ராஜேஷ் குமார், “நடனங்கள் வழி பல்வேறு உணர்வுகளையும் கதைகளையும் எளிதாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இத்தகைய தயாரிப்புகளின் காட்சிகளையும் உணர்வுகளையும் பிணைக்கும் விதமாக இந்நடனங்கள் அமைகின்றன,” என்று கூறினார்.
“இத்தயாரிப்பில் பங்காற்றியதன் வழி, இதை மேடையேற்றுவதற்கு எவ்வளவு உழைப்பு தேவை என்பதைத் தெரிந்துகொண்டேன். கடினமாக இருந்தாலும், நிச்சயம் இத்தகைய படைப்புகளில் மீண்டும் இணைவேன்,” என்றார் வர்ஷா.

