குடும்பப் பிணைப்புகள், இழப்பு, நட்பு, காதல், நகைச்சுவை, மர்மம் கலந்த ‘அத்தியாயம்: அகக்கடல் யாத்திரை’ நாடகம் சனிக்கிழமை (செப்டம்பர் 12) பாய்விரித்துப் புறப்பட்டது.
‘தமிழா’ இளையர் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இந்த மேடை நாடகம் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் அரங்கேறியது.
இரண்டு காட்சி நேரங்களில் படைக்கப்பட்ட ‘அத்தியாயம்’ நாடகத்தைக் காண கிட்டத்தட்ட 500 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
உல்லாசக் கப்பல் பயணம் ஒன்றில் நேரிடும் ஓர் எதிர்பாரா கொலைச் சம்பவத்தால் கப்பலின் ஆறு பயணிகளும் பணியாட்களும் அந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதோடு, அவரவர் தனிப்பட்ட சவால்களையும் அதன்வழி கற்றுக்கொள்ளும் பாடங்களையும் உணர்ச்சிபூர்வமான, நகைச்சுவையான முறையில் வழங்கியது ‘அத்தியாயம்’.
கதை உருவாக்கம் முதல் மேடை வரை ஏறத்தாழ ஓராண்டு பிடித்தது என்று தெரிவித்தார் இயக்குநர் வடிவேல் ஜெய்வசந்த், 23.
“இளையர்கள் எதிர்கொள்ளக்கூடிய பொதுவான பிரச்சினைகளை நாங்கள் இந்த நாடகத்தின்வழி ஆராய விரும்பினோம்,” என்றார் அவர்.
பெற்றோர் - பிள்ளைகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, புதுமணத் தம்பதி எதிர்கொள்ளும் சவால்கள், விட்டுச் சென்ற அன்பர் போன்ற கதாபாத்திரங்கள் நாடகத்துக்கு உணர்வூட்டின.
மேடையேறிய நடிகர்களைத் தவிர, தயாரிப்பாளர்கள், மேடை நிர்வாகிகள், ஆடை அலங்காரக் குழுவினர், எழுத்தாளர்கள் என ‘அத்தியாயம்’ நாடகக் குழு ஏறத்தாழ 85 பேரைக் கொண்டது என்றார் தயாரிப்புக் குழுத் தலைவர் ஃபஹ்மிதா சனா, 22.
“பல மாத ஒத்திகைகளுக்குப் பிறகு பல்வேறு குழுக்களும் இந்தப் பெரிய நிகழ்ச்சிக்காக ஒன்றிணைவதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் அவர்.
ரக்ஷனா பாண்டியன், 21, உள்ளிட்ட சிலருக்கு ‘அத்தியாயம்’ முதல் மேடை அனுபவமாக இருந்தது.
கப்பலில் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த அவர், தன்னைவிட அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கு ஈடுகொடுப்பது தனக்கிருந்த சவால்களில் ஒன்று என்று குறிப்பிட்டார்.
“குழுவில் உள்ள அனைவரும் மிகவும் உதவியாக இருந்தனர். மேலும் என்னை மிகவும் அன்புடன் வரவேற்றனர்,” என்றார் அவர்.
நடிப்பு மட்டுமன்றி இசையும் நடனமும் சேர்ந்து முழுக்க முழுக்க இளையர்களால் படைக்கப்பட்ட மூன்றாவது நாடகமான ‘அத்தியாயம்’, அத்தொகுப்பின் இறுதி நாடகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
