தடைகளைத் தாண்டிய விளையாட்டு வீரர்

தடைகளைத் தாண்டிய விளையாட்டு வீரர்

2 mins read
b6a021a8-0eba-42af-a850-04281d46a023
அறிவுசார் குறைபாடு இருந்தாலும் விளையாட்டுகளில் பலர் போல ஈடுபட முடியும் என்றார் தீபக். - படம்: மைண்ட்ஸ் ஃபெர்ன்வேல் கார்டன்ஸ் பள்ளி

விளையாட்டுகளில் கிண்ணங்களையும் பதக்கங்களையும் வெல்ல வேண்டும் என்பது ஜோதி கண்ணா தீபக்கின் விருப்பம். இளம்பருவத்திலிருந்தே காற்பந்தில் ஈடுபட்டுவரும் 15 வயது தீபக், பெற்றோர்களால் அதிகம் ஊக்குவிக்கப்பட்டார்.

அறிவுசார் குறைபாடு உள்ள தீபக், தம்மைப் போன்றவர்களால் விளையாட்டுகளில் ஈடுபட்டுச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்த விரும்புகிறார்.

மைண்ட்ஸ் ஃபெர்ன்வேல் கார்டன்ஸ் பள்ளியில் பயிலும் தீபக் தனது பள்ளியின் விளையாட்டுக் குழுவில் சேர்ந்து பல்வேறு விளையாட்டுத் துறைகளில் திறன்களையும் ஆர்வத்தையும் தொடர்ந்து வளர்த்து வருகிறார்.

காற்பந்துக்கு அப்பாற்பட்டு அவர் நீச்சல் அடிப்பது, கூடைப்பந்து விளையாடுவது எனத் தன்னை விளையாட்டுகளில் முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்கிறார்.

விளையாட்டுகளில் பலருடன் சேர்ந்து ஈடுபடும்போது தோழமை அதிகரிக்கும் என்றார் தீபக் (மஞ்சள் டி-சட்டை).
விளையாட்டுகளில் பலருடன் சேர்ந்து ஈடுபடும்போது தோழமை அதிகரிக்கும் என்றார் தீபக் (மஞ்சள் டி-சட்டை). - படம்: மைண்ட்ஸ் ஃபெர்ன்வேல் கார்டன்ஸ் பள்ளி

சென்ற ஆண்டு (2025) நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் அவரும் ஒருவர்.

அப்போட்டியில் பெற்றோர் பெரிய உந்துசக்தியாக இருந்து ஊக்குவித்ததாக தீபக் தெரிவித்தார். விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து மேலும் கவனமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக அவர் சொன்னார்.

புதிய விளையாட்டுகளில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்துடன் இருக்கும் அவர், அடுத்து ஹாக்கி விளையாட எண்ணியுள்ளார்.

‘மைண்ட்ஸ் கலர் சாக்ஸ் பரேட் 2026’ எனும் அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு விழாவில் தீபக் கலந்துகொண்டார்.

‘விளையாட்டின் மூலம் அனைவரையும் உள்ளடக்குவதைக் கொண்டாடுவோம்’ என்ற கருப்பொருளை விழா கொண்டிருந்தது.

அறிவுசார் குறைபாடுள்ளோரின் திறன்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும் தடைகளைத் தகர்த்தெறியவும் நிலையான ஒருங்கிணைப்பை நோக்கிச் சமூகத்தை ஊக்குவிக்கவும் விளையாட்டை ஒரு தளமாகப் பயன்படுத்துவதே அதன் நோக்கமாகும்.

அதில் பங்கேற்ற தீபக் விளையாட்டில் தனியாக ஈடுபடுவதற்குப் பதிலாக குழுக்களில் இணைவதையும் புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்வதையும் விரும்புகிறார்.

அவர் நார்த்லைட் பள்ளியுடன் இணைந்து நடைபெறும் ‘ப்ளே இன்குளூசிவ் யூனிஃபைட் காற்பந்துப்’ போட்டியில் பங்கேற்கிறார்.

அதில் அவர்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து விளையாடுவார்கள். அந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. மேலும், அதற்கான பயிற்சிகளை அவர்கள் மே 4 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளனர்.

விளையாட்டில் பலரும் இணைந்து விளையாடுவது முக்கியம் எனும் தீபக், அதில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படும்போது தோழமை அதிகரிக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்