மூன்றாம் ஆண்டாக நடந்தேறிய கர்நாடக இசைக்கான சிங்கைப் பல்லிய விருதுகளில் 50 பிரிவுகளின்கீழ் 260 இளையர்கள் விருதுகளை வென்றனர்.
இளம் தலைமுறையினரிடையே கர்நாடக இசை ஆர்வத்தை ஊக்குவிக்க முனையும் சிங்கைப் பல்லிய அரங்கு அந்த விருது நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சி, மே மாதம் 23ஆம் தேதி சிங்போஸ்ட் அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகத் தமிழ்மொழி மாதத்தையொட்டி அவ்வமைப்பு வெளியிட்ட சிங்கப்பூர் தமிழ் வாழ்த்துப் பாடலை 25 இளம் பாடகர்கள் மேடையில் பாடினர்.
அதோடு நிகழ்ச்சியில் திருவாட்டி சோ.மீனாட்சியின் தலைமையில் சிறப்பு வீணை அங்கமும் இடம்பெற்றது.
நிகழ்ச்சிக்கான தயாரிப்பு நான்கு மாதங்களுக்கு முன்னரே தொடங்கியதாகவும் 400க்கும் மேற்பட்ட இளையர்கள் போட்டியில் பங்கெடுத்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
போட்டிகள் மே 10ஆம் தேதி வைஸ் ஓக்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தேறியது.
புகழ்பெற்ற புல்லாங்குழல் வித்வான் திருச்சி சரவணனின் தலைமையில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏழு கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் போட்டியின் நடுவர்களாகப் பொறுப்பு வகித்தனர்.
வீணை, வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு முதலிய போட்டிகள் பல வயதினருக்காக நடத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு முதன்முறையாகத் தாள வாத்தியப் போட்டியும் இடம்பெற்றது.
‘யோகமும் வாழ்க்கையும்’ அமைப்பு நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியது.

