எதிர்காலத்தில் வேலை செய்யும் தேவையை அகற்ற இன்றே கடுமையாக வேலை செய்கின்றனர் ‘மென்லோ’ நிறுவனத்தினர்.
அவர்கள் உருவாக்கிய ‘அசிமாவ்’ எனும் நடக்கும் இயந்திர மனிதர், தகவல், மின்னிலக்க மேம்பாடு; சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் உட்பட வந்திருந்தோர் அனைவரையும் பரவசப்படுத்தியது.
“இயந்திர மனிதர்கள் ஆபத்தான வேலைகளைச் செய்யும்போது மக்கள் இளைப்பாறலாம்,” என்றார் நிறுவனத்தின் பொறியாளர் ஜாஷான் குமரேஷ், 25.
‘ஜான்’ (Jan) எனும் மென்பொருளையும் (software agent) மென்லோ உருவாக்கியுள்ளது. ஜானிடம் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அது கேட்டதைச் செய்து கொடுக்கும். மேல்விவரங்களுக்கு https://menlo.ai/ இணையத்தளத்தை நாடலாம்.
உரையாடும் வீட்டுக் கருவிகள்
தனிமையில் இருக்கும்போது அல்லது வேலையிட மன உளைச்சலால் வாடும்போது வீட்டின் கருவிகள் நகைச்சுவையாகப் பேசினால் ஆறுதல் கிடைக்கும்.
அதுவே சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தரவு அறிவியல் இறுதியாண்டு மாணவர் குஹனவேல் அஷோக் குமாரின் திட்டம்.
‘டோஸ்டர்-சான்’ (Toaster-Chan) எனும் அவருடைய திட்டம், சாதாரண ரொட்டி வாட்டும் கருவியைப் பேசும் கருவியாக மாற்றுகிறது. அதனுடன் பேசினால், அது ரொட்டியை வாட்டுவதுடன், பதிலுக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கையும் சொல்லும்.
சிங்கப்பூர் பாணியிலேயே அது பதில்சொல்லும் என்பது சிறப்பு அம்சம். இதற்குச் சேட்ஜிபிடியை குஹனேஷின் குழுவினர் பயன்படுத்தினர். இத்திட்டம் ‘என்யுஎஸ் ஹேக்&ரோல் 2025’ (NUS Hack&Roll) எனும் வருடாந்திர 24-மணி நேரப் போட்டியில் பரிசையும் வென்றது.
தொடர்புடைய செய்திகள்
“செயற்கை நுண்ணறிவு என்றாலே வேலைகளை இன்னும் வேகமாகச் செய்வது என்றே பலரும் சிந்திக்கின்றனர். ஆனால் மனநலத்துக்கும் அது உதவக்கூடியது. மூப்படையும் சமுதாயமான சிங்கப்பூரில் வயதான காலத்தில் தனிமையைப் போக்குவது முக்கியம்,” என்றார் குஹனவேல்.
இவர் திட்டம் குறித்த மேல்விவரங்களுக்கு https://devpost.com/software/toaster-chan இணையத்தளத்தை நாடலாம்.
தோற்றத்துக்கு மெருகேற்றும் ‘ஏஐ’ ஒப்பனையாளர்
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக (எஸ்யுடிடி) கணினி அறிவியல் மாணவர் ஷ்வேதா ஐயர், 21, தம் குழுவினரோடு பள்ளி இறுதியாண்டுத் திட்டமாக ‘காகாமி’ (KagaMe) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஒப்பனையாளரை உருவாக்கியுள்ளார்.
“ஒருவர் உடைகளைப் புகைப்படம் எடுத்து, அவற்றைச் செயலியில் பதிவேற்றலாம். செயலி அது எத்தகைய உடை என்பதை வகைப்படுத்தும். அதன் அடிப்படையில், எத்தகைய உடைகள் வாங்கலாமென அது பரிந்துரைக்கும்,” என்றார் ஷ்வேதா.
கூடுதலான உடைகளின் புகைப்படங்களைப் பதிவேற்ற பதிவேற்ற, ஒருவரின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு இன்னும் சிறப்பான பரிந்துரைகளை அது வழங்கும்.
ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடன் பங்காளித்துவங்களை ஏற்படுத்த விரும்புகிறார் ஷ்வேதா.
‘ஜூனியர் அச்சீவ்மண்ட் சிங்கப்பூர்’ அமைப்பின் போட்டியில் ‘காகாமி’ முதல் பரிசான S$15,000ஐ வென்றது. செயலி பற்றி மேலும் அறிய https://kagame.webflow.io/ இணையத்தளத்தை நாடலாம்.
தேர்வுகளுக்குத் தயாராக உதவும் ஏஐ
தேர்வுகளுக்காகத் தனியாகச் சிரமப்படும் காலம் கடந்துவிட்டது. ‘எலிடெக்’ (eledeck) எனும் ஏஐ தளத்தில் மாணவர்கள் தம் பாடக் குறிப்புகளைப் பதிவேற்றினால் அது உடனடியாகக் கற்றல் உதவி அட்டைகளை உருவாக்கித் தரும். இதன்மூலம், கற்றதை இன்னும் சுலபமாக நினைவுகூரலாம்.
அதேவேளையில், கற்ற விஷயங்களைத் தளத்தின் சேட்போட்டிடம் விளக்கி, அந்த விஷயத்தை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்துகொண்டுள்ளார் என்பதையும் அறிந்துகொள்ளலாம். ‘ஃபேன்மேன்’ கற்றல் உத்தியைப் பயன்படுத்தும் அந்தச் சேட்போட் பத்து வயது சிறுவர்போல் கேள்விகள் கேட்கும்.
“எத்தகைய கற்றல் முறை ஒருவருக்கு ஏற்புடையது போன்றவற்றையும் தளம் காண்பிக்கும்,” என்றார் எஸ்யுடிடி மாணவர் வருண் தேஜா, 25. மேல்விவரங்களுக்கு https://eledeck.com/ இணையத்தளத்தை நாடலாம்.