சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைமுறையிலிருந்து சற்று விடுபட்டு, மனத்தை அமைதிப்படுத்த ஒரு குறுகிய காலப் பயணம் தேவைப்படும்போது, என் நினைவுக்கு முதலில் வருவது இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுதான்.
இதுவரை 13க்கும் மேற்பட்ட முறை நான் அங்கு சென்று வந்திருக்கிறேன் என்றாலே, என் குடும்பத்திற்கு அது எவ்வளவு நெருக்கமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
2023 டிசம்பரில் மலேசியாவின் விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டதற்கு முன்புவரை, கண்டிப்பான விசா விதிமுறைகளின் காரணமாக இந்தியக் குடியுரிமை கொண்ட சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் ஜோகூர் பாரு போன்ற அண்டை நாட்டுப் பகுதிகளுக்கு வார இறுதியில் எளிதாகச் சென்று வரவியலாது.
ஆனால், பாத்தாமிற்குச் சென்றபின் விசா பெற்றுக்கொள்ளும் வசதி (Visa-on-arrival) வசதி, வார இறுதியில் எவ்விதத் திட்டமிடலும் இன்றி உடனே கிளம்பிச் செல்லக்கூடிய ஒரு சிறந்த மாற்று வாய்ப்பை என் குடும்பத்திற்கு வழங்கியது.
அதுவே அந்தத் தீவுடனான எங்களது நீண்டகாலப் பிணைப்பிற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
நதிக்கரை உணவகங்களும் நாவூறும் விருந்தும்
ஒரு பயணத்தின் ஆன்மா அதன் உணவில்தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் கடலுணவு வகைகளை மலிவான விலையில் உண்பது சற்று சவாலானதாக இருக்கலாம்.
ஆனால் பாத்தாமில், குறிப்பாகப் புகழ்பெற்ற பாரேலாங் பாலத்திற்கு அருகில் உள்ள கடல்சார் உணவகங்களில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது.
அங்கு நாமே நமக்குப் பிடித்த கடலுணவு வகைகளை நேரடியாகத் தேர்ந்தெடுத்து உண்ணலாம். தரமான, சுவையான உணவு மிகக் குறைந்த விலையில் கிடைப்பது, பாத்தாம் தீவின் கூடுதல் சிறப்பு.
பல்வேறு பொழுதுபோக்குகள்
பாத்தாம் வெறும் உணவிற்கான தளம் மட்டுமன்று, அது எல்லா வயதினரையும் கவரும் ஒரு பொழுதுபோக்கு மையமும்கூட.
முறையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஹோட்டல் வளாகத்திற்குள் ஓட்டப்படும் ஸ்கூட்டர்கள், விறுவிறுப்பான ‘கோ-கார்ட்டிங்’ விளையாட்டு, தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய ‘பாத்திக்’ ஓவியம் வரைதல் எனப் பல அம்சங்கள் அங்குண்டு.
அங்கு கிடைக்கும் பல சுவைகளைக் கொண்ட புகழ்பெற்ற ‘லேயர் கேக்’கைச் சுவைப்பதும், நீலக் கடலில் நீந்தி மகிழ்வதும் தனியின்பம்.
ஒரே நேரத்தில் கிராமப்புறத்தின் இயற்கை அமைதியையும், நகரப்புறத்தின் நவீன கலாச்சாரத்தையும் ஒருசேர வழங்குவது பாத்தாம் தீவின் தனித்துவம்
மக்களின் தேவை எதுவாக இருந்தாலும், அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பன்முகத்தன்மை அத்தீவிற்கு உண்டு.
குடும்பப் பிணைப்பிற்கான தளம்
இன்றைய மின்னிலக்கக் காலத்தில், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுவது அரிதாகிவிட்டது.
இத்தகைய சூழலில், குடும்பப் பிணைப்பை மீண்டும் வலுப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி பெறவும் பாத்தாம் ஒரு சிறந்த தளமாக அமைகிறது.
கால மாற்றத்தில் இன்று விசா விதிமுறைகள் மாறி பல புதிய பயண வாய்ப்புகள் திறந்திருக்கலாம்.
ஆனாலும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் குடும்பத்தின் அழகான நினைவுகளைச் சுமந்து நிற்கும் பாத்தாம் தீவு, என்றும் எங்கள் இதயத்திற்கு நெருக்கமான ஒரு புகலிடமாகவே திகழும்.

