இளைய எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு

இளைய எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு

படம்: லர்னர் சர்க்கிள்

20 Sep 2026 - 5:30 am

2 mins read

இளைய எழுத்தாளர்களின் புத்தாக்கத்தையும் கற்பனையையும் கொண்டாடும் வண்ணம் ‘லர்னர் சர்க்கிள்’ அமைப்பின் ‘வாய்சஸ் ஆஃப் சிங்கப்பூர்’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹார்பர்ஃபிரன்ட் நூலகத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இளைய எழுத்தாளர்கள் 17 பேரின் நூல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகத் தொழில்முனைவரும் முதலீட்டாளருமான எடி சாவ், எழுத்தாளர் அரவிந்த் சந்திரசேகரன் இருவரும் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டு ‘லர்னர் சர்க்கிள்’ நடத்திய ‘ரைட்டத்தான்’ (Writathon) போட்டியில் வெற்றிபெற்ற இளையர்களுக்கு பிளேஸ்டேஷன் 5, ஐபேட், ஹோவர் பலகை (Hoverboard) ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்ற ஆண்டின் வெற்றியாளர்களும் இவ்வாண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இளைய எழுத்தாளர்களுக்குத் தங்கள் நூல்கள் வெளியிடப்படுவது பெருமைமிக்க மைல்கல்லாக அமைவதோடு அவர்களின் எண்ணங்களும் கற்பனைகளும் அந்நூல்கள்வழி வாசகர்களுக்குக் கடத்தப்படுகின்றன என்று ‘லர்னர் சர்க்கிள்’ அமைப்பின் நிறுவனரான அனுராதா வெங்கடாசலம் சங்கர் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவுக் காலத்தில், ‘ரைட்டத்தான்’ போட்டி, இத்தகைய நூல் வெளியீடுகள் போன்ற முயற்சிகள் இளையர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும் மிகவும் முக்கியமானவை.

“நாம் படித்து வளர்ந்த அழகான கதைகளின் மகிழ்ச்சியைப் பாதுகாப்பதன்மூலம், எதிர்காலத் தலைமுறையினரும் அதனை அனுபவிக்க முடியும்,” என்றார் அவர்.

இளையர்கள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், வாசிப்பு, கதை சொல்லல் ஆகியவற்றின் மகிழ்ச்சியைக் கண்டறியவும் வாய்ப்புகளை உருவாக்குவதே ‘லர்னர் சர்க்கிள்’ அமைப்பின் நோக்கம்.

தொடர்ந்து இளைய எழுத்தாளர்களின் கற்பனைக்கும் திறமைக்கும் ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுமென அவ்வமைப்பு உறுதியளித்தது.

குறிப்புச் சொற்கள்